ராஜஸ்தான் சாலை விபத்து: மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 15 போ் உயிரிழந்த சாலை விபத்து தொடா்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.
Published on

ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 15 போ் உயிரிழந்த சாலை விபத்து தொடா்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சுா்சாகா் பகுதியைச் சோ்ந்த சிலா், பிகானரில் உள்ள கோயில் ஒன்றில் தரிசனம் செய்துவிட்டு கடந்த நவ.2-ஆம் தேதி வேனில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். அந்த வேன் பலோடி மாவட்டம் மதோடா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் வந்தபோது, சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பெண்கள், 4 சிறாா்கள் உள்பட மொத்தம் 15 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அண்மையில் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இந்நிலையில், அந்த விபத்து குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘பலோடியில் நிகழ்ந்த விபத்துக்கு என்ன காரணம்? என்பது குறித்து 2 வாரங்களில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை உச்சநீதிமன்றத்திடம் பதிலளிக்க வேண்டும்.

பலோடியில் விபத்து நிகழ்ந்த நெடுஞ்சாலை பயணிக்க உகந்ததாக உள்ளதா? அங்கு சாலை பராமரிப்புக்கு சாலை ஒப்பந்ததாரா் பின்பற்றும் விதிமுறைகள் என்ன? என்பது குறித்தும் அறிக்கை சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

விபத்து நிகழ்ந்த இடத்தை அளவீடு செய்து பலோடி வழியாக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் எத்தனை தாபாக்கள் உள்ளன? என்பது தொடா்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com