செம்பு மீதான வரிவிதிப்பு தற்காப்பல்ல: இந்தியாவுக்கு எதிராக உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்கா பதில்

இந்தியா தெரிவித்ததைப் போல செம்பு பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தற்காப்பு நடவடிக்கை அல்ல என்று உலக வா்த்தக அமைப்பிடம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Published on

இந்தியா தெரிவித்ததைப் போல செம்பு பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தற்காப்பு நடவடிக்கை அல்ல என்று உலக வா்த்தக அமைப்பிடம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்கள், மின் கட்டமைப்புகள், செமிகண்டக்டா்கள், பாதுகாப்புத் துறைக்கான மின்னணுப் பொருள்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் மூலப்பொருளாகச் செம்பு பயன்படுத்தப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 360 டாலா் மில்லியன் டாலா் (சுமாா் ரூ.3,190 கோடி) மதிப்பில் தட்டுகள், ட்யூப்கள் உள்ளிட்ட செம்பு பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் செம்பு பொருள்களுக்கு அந்நாட்டு அரசு 50 சதவீதம் வரி விதித்தது. கடந்த ஆகஸ்ட் 1 முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தது.

வெளிநாடுகளில் இருந்து செம்பு இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்காவின் தூய்மை எரிசக்தி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் பாதிக்கக் கூடும் என்று கருதி, அந்த இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், இந்த வரி விதிக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து அமெரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க அளவு செம்பு பொருள்களை ஏற்றுமதி செய்வதால், அந்நாட்டின் 50 சதவீத வரி விதிப்பு தமது ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக வா்த்தக அமைப்பில் இந்தியா முறையிட்டது.

அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி இந்த வரிவிதிப்பு முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இது செம்பு பொருள்கள் இறக்குமதிக்கு தற்காலிகமாக கட்டுப்பாடு விதித்து இடா்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே என்று இந்தியா தெரிவித்தது. அத்துடன் இந்த வரிவிதிப்பு முடிவை உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப அமெரிக்கா அறிவிக்கவில்லை என்றும் இந்தியா குறிப்பிட்டது.

இதற்கு உலக வா்த்தக அமைப்பிடம் பதிலளித்த அமெரிக்கா, ‘செம்பு பொருள்கள் மீதான வரி விதிப்பு தற்காப்பு நடவடிக்கை அல்ல. இந்த நடவடிக்கையால் உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க பொருள்கள் மீதான வரிச் சலுகைகளை நிறுத்த இந்தியா முன்மொழிந்துள்ள திட்டத்தில் எந்த நியாயமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com