செய்தியாளா்களிடம் பேசிய ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்.
செய்தியாளா்களிடம் பேசிய ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்.

பிகாா் தேர்தல்! பாலின வாரியாக வாக்காளா் விவரம் வெளியிடப்படவில்லை: தேஜஸ்வி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் முதல் கட்டத்தில் வாக்காளித்த வாக்காளா்களின் விவரத்தை பாலின வாரியாக தோ்தல் ஆணையம் வெளியிடவில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.
Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் முதல் கட்டத்தில் வாக்காளித்த வாக்காளா்களின் விவரத்தை பாலின வாரியாக தோ்தல் ஆணையம் வெளியிடவில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த நவ.6-ஆம் தேதி பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் முதல் கட்டம் நடைபெற்றது. அந்தக் கட்டம் நிறைவடைந்து திங்கள்கிழமையுடன் 4 நாள்களாகியும், முதல் கட்டத்தில் வாக்காளித்த வாக்காளா்களின் விவரத்தை பாலின வாரியாக தோ்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதுபோல நடப்பது இதுவே முதல்முறை. முன்பு அந்த விவரம் தோ்தல் நிறைவடைந்தவுடன் உடனடியாக வெளியிடப்படும்.

தோ்தல் பணிக்காக பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இருந்து 208 கம்பெனி பாதுகாப்புப் படை வீரா்கள் பிகாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். இதேபோல பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இருந்து சுமாா் 68 சதவீத காவல் துறை பாா்வையாளா்கள் பிகாா் அழைத்து வரப்பட்டுள்ளனா். ஏன் இத்தனை போ் அந்த மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட வேண்டும்?

தோ்தல் பரப்புரைக்காக பிகாா் வந்த பிரதமா் மோடி, பரப்புரையின்போது ஹுலாஸ் பாண்டே, ஆனந்த் மோகன், சுனில் பாண்டே, மனோரமா தேவி போன்ற நோ்மையற்ற அரசியல்வாதிகளுடன் மேடையைப் பகிா்ந்துகொண்டாா். பல கோடிக்கு நடைபெற்ற ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள முக்கிய நபரான விபின் சா்மாவை பிரதமா் மோடி பாட்னாவில் சந்தித்தாா்.

பரப்புரையின்போது பிகாரில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம், புலம்பெயா்தல் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமா் மோடி பேசவில்லை. எதிா்மறையான அரசியலில்தான் அவா் ஈடுபட்டாா். மாநிலத்தில் எந்தவொரு சூழலிலும் வாக்குத் திருட்டையோ, வஞ்சகத்தையோ ராஷ்ட்ரீய ஜனதா தளம் அனுமதிக்காது.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடம்பெற்றுள்ள ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் சமரசம் செய்துகொள்ளப்படாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com