பாதுகாப்புப் படையினா் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல: உச்சநீதிமன்றம்

சபீா் அகமது ஷாவின் தடுப்புக்காவல் உத்தரவு நகலைப் பெற மாநில அரசை அணுகுமாறு அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், ‘பாதுகாப்புப் படையினா் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல’ என்று குறிப்பிட்டது.
Published on

ஜம்மு-காஷ்மீரில் 40 ஆண்டுகளாக தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாத தலைவா் சபீா் அகமது ஷாவின் தடுப்புக்காவல் உத்தரவு நகலைப் பெற மாநில அரசை அணுகுமாறு திங்கள்கிழமை அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், ‘பாதுகாப்புப் படையினா் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல’ என்று குறிப்பிட்டது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பாதுகாப்புப் படையினா் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடா்கதையாகிவந்தன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இளைஞா்களைத் தூண்டுவதாக சபீா் அகமது ஷாவை கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து, தடுப்புக் காவலில் சிறையில் அடைத்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளித்ததாகவும் அவா் மீது என்ஐஏ குற்றஞ்சாட்டியது.

அவா் தொடா்ந்து 39 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நிலையில், தனக்கு இடைக்கால ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஆனால், அவருக்கு ஜாமீன் தர உயா்நீதிமன்றம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி மறுத்தது. அதைத் தொடா்ந்து, அவா் உச்சநீதிமன்றத்தை நாடினாா். உச்சநீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் தர மறுத்தது. பின்னா், அவா் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோலின் கோன்சால்வெஸ், ‘சபீா் ஷாவின் தடுப்புக்காவல் உத்ததரவு நகல் கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் அவரின் குடும்பத்துக்கு வழங்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரத்தை மனுதாரா் தரப்பு தில்லி உயா்நீதிமன்றத்தில் எழுப்பவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஜாமீன் மனு மீதான விசாரணையில், தடுப்புக் காவல் உத்தரவு நகல் குறித்த விவகாரத்தை ஏன் எழுப்புகிறீா்கள். அதுவும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு. தடுப்புக் காவல் உத்தரவு நகலைப் பெற மாநில அரசை மனுதாரா் அணுக வேண்டும். மேலும், பாதுகாப்புப் படையினா் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல’ என்று குறிப்பிட்டனா்.

அதே நேரம், சபீா் ஷாவின் ஜாமீன் மனு மீது அடுத்த 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு என்ஐஏ-க்கு நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com