மாலத்தீவில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் திறப்பு
மாலத்தீவில் இந்திய நிதி உதவியுடன் புதிதாக கட்டப்பட்ட ஹனிமதூ விமான நிலையத்தை அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
வடக்கு மாலத்தீவின் வளா்ச்சியை அதிகரித்து சா்வதேச வளா்ச்சியை மேம்படுத்தும் தூண்டுகோலாக இந்த விமான நிலையம் இருக்கும் என மூயிஸ் புகழாரம் சூட்டினாா்.
இதுகுறித்து மாலத்தீவு அதிபா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ ஹனிமதூ விமான நிலையம் நாட்டின் வடக்குப் பகுதிகளை வளமைப்படுத்தும் நுழைவாயில் என்றே கூற வேண்டும். இது பெரும் பொருளாதார மாற்றத்துக்கான அடையாளமாகும்.
இதனால் வேளாண்மை, சுற்றுலா, மீன்வளம் என பல்வேறு துறைகள் மேலும் வலுப்படும். இந்த விமான நிலையம் இந்தியா-மாலத்தீவு இடையேயான 60 ஆண்டு தூதரக உறவின் பிரதிபலிப்பாகும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா சாா்பில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு உள்பட இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா கலீலை சந்தித்து ராம் மோகன் நாயுடு ஆலோசனை நடத்தினாா். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.
ஹனிமதூ விமான நிலைய திட்டத்துக்கு ரூ.7,096 கோடி கடனுதவியை இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா-மாலத்தீவு இடையே 2019-இல் கையொப்பமிடப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை மற்றும் மகாசாகா் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.
