

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இதில், பெரும்பாலும் அல்ல அனைத்து கருத்துக் கணிப்புகளுமே ஒன்றுபோல தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பது போல எண்ணிக்கையை வெளியிட்டுள்ளன.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதே கடினம் என்பது போல கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும், இவை எதுவும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்காது என்பதே, இதுவரை பார்க்கப்பட்ட வரலாறாக உள்ளது. உண்மையில், தேர்தல் கணிப்புக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் வழக்கமாக எந்தத் தொடர்பும் ஒற்றுமையும் இருந்ததில்லை. உண்மையில் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை வாக்கு எண்ணிக்கை அன்றே அறிய முடியும்.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு முதல்கட்டமாக நவ.6-ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின. 2வது மற்றும் இறுதிக்கட்டமாக, 20 மாவட்டங்களை உள்ளடக்கிய 122 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இறுதி நிலவரம் வெளியாகவில்லை.
வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், அனைத்து கருத்துக் கணிப்புகளுமே எந்த மாற்றமும் இன்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியே பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் முதல் ஜேவிசி வரை ஒவ்வொன்றும் 120 முதல் 170 தொகுதிகள் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், 70 முதல் 105 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி அல்லது மகாகத்பந்தன் கூட்டணி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் ஆலோசகராக விளங்கி, பிகார் தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதே அரிது என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிகார் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை கருத்துக் கணிப்புகள் அப்படியே தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது இல்லை. கடந்த 2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பே இதற்கு ஓர் உதாரணம்.
பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பிகாரில் ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணி அதிகத் தொகுதிகளில் வென்று முந்திச் செல்லும் என்றே கணித்திருந்தன.
தி டைம்ஸ் நௌ- சி ஓட்டர் கருத்துக் கணிப்பு, பிகாரில் 2020ஆம் ஆண்டு தேர்தலில் தொங்கு பேரவை அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 116 தொகுதிகளிலும் மகாகத்பந்தன் கூட்டணி 120 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவித்திருந்தது.
தொடர்ந்து இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா தேர்தல் கணிப்பு, மகாகத்பந்தன் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடையும். இந்த கூட்டணிக்கு 150 தொகுதிகள் கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 80 தொகுதிகள் கிடைக்கும்.
ஜன் கி பாத் பிகார் வெளியிட்ட கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 104 தொகுதிகளிலும், தேஜஸ்வி கூட்டணி 128 தொகுதிகளில் வெல்லும்.
டிவி9 பாரத்வர்ஷ் பிகார் தேர்தல் கணிப்பில், மகாகத்பந்தன் 120 தொகுதிகளில் வெல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 115 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருந்தது. இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியால் பிகாரில் ஆட்சியமைக்க முடியாமல் போனது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, நிதீஷ் குமாருடன் இணைந்து ஆட்சியமைத்து, அவரை முதல்வராக்கியது. பாஜக 74 தொகுதிகளில் வென்றிருந்தாலும், வெறும் 43 தொகுதிகளை வென்ற நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது பாஜக.
இந்த நிலையில்தான், இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் என்னவென்று நவ.14 அன்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.