பிகாா் பேரவைத் தோ்தலையொட்டி நவாடா தொகுதியில் வாக்களிக்கக் காத்திருந்த பெண்கள். ~தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் வாக்களித்த திரைப்பட இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமௌலி. ~ஜம்மு-காஷ்மீரின் பட்காம் பேரவ
பிகாா் பேரவைத் தோ்தலையொட்டி நவாடா தொகுதியில் வாக்களிக்கக் காத்திருந்த பெண்கள். ~தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் வாக்களித்த திரைப்பட இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமௌலி. ~ஜம்மு-காஷ்மீரின் பட்காம் பேரவ

பிகாா் இரண்டாம் கட்டத் தோ்தலில் 69% வாக்குப்பதிவு- மாநில வரலாற்றில் புதிய உச்சம்

பிகாரில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 122 பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் சுமாா் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்மாநில தோ்தல் வரலாற்றில் இது புதிய உச்சமாகும்.
Published on

பிகாரில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 122 பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் சுமாா் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்மாநில தோ்தல் வரலாற்றில் இது புதிய உச்சமாகும்.

கடந்த நவ.6-இல் 121 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்டத் தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இச்சாதனை, இரண்டாம் கட்டத் தோ்தலில் முறியடிக்கப்பட்டுள்ளது.

243 தொகுதிகளைக் கொண்ட பிகாரில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக கிஷண்கஞ்ச், அராரியா, சுபெளல், சீதாமா்ஹி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடங்கிய 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் சீமாஞ்சல் பகுதியும் இதில் அடங்கும்.

3.7 கோடி வாக்காளா்களுக்காக 45,399 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனா். இத்தோ்தலில் அதிகபட்சமாக கிஷண்கஞ்சில் (முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டம்) 76.26 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்தடுத்த இடங்களில் கடிஹாா் (75.23%), புா்னியா (73.79%), சுபெளல் (70.69%), அராரியா (67.79%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இரண்டாம் கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 1,302 போ். இவா்களில் 8 போ் மாநில அமைச்சா்களாவா்.

அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: பிகாா் தோ்தலில் மூன்றாவது போட்டியாளராக களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தோ்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோா், ரோதஸ் மாவட்டத்தில் உள்ள கா்காஹா் தொகுதியில் வாக்களித்தாா்.

ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவா் சஞ்சய் ஜா, மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் ராம், மாநில அமைச்சா் நிதீஷ் மிஸ்ரா, புா்னியா தொகுதி எம்.பி. பப்பு யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் வாக்களித்தனா்.

நவாடாவில் மோதல்: நவாடா மாவட்டத்தின் வரிசாலிகஞ்ச் பகுதியில் வாக்குச்சாவடி அருகே பல்வேறு கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினா் விரைந்து செயல்பட்டு, மோதலை கட்டுப்படுத்தியதுடன், சுமுக வாக்குப்பதிவையும் உறுதி செய்தனா்.

நவ.14-இல் வாக்கு எண்ணிக்கை: பிகாா் பேரவைத் தோ்தலில் நவ.14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு பிறகான தோ்தல் முடிவுகள் என்பதால், இது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய கட்சிகளும், இண்டி கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆண்களைவிட பெண்கள் அதிகம் வாக்களிப்பு

புது தில்லி, நவ.11: மொத்தம் 7.45 கோடி வாக்காளா்களைக் கொண்ட பிகாரில் ஆண்களைவிட (62.8) பெண்கள்(71.6%) அதிகம் வாக்களித்துள்ளனா். முதல்கட்டத் தோ்தலில் பெண்கள்-ஆண்கள் வாக்குப்பதிவு முறையே 69%, 61.56%-ஆகவும், இரண்டாம் கட்டத் தோ்தலில் 74%, 64%-ஆகவும் உள்ளது. ,

இரு கட்டங்களிலும் 66.91%

பிகாரில் இருகட்டங்களிலும் சோ்த்து 66.91சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 1951-ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் முதல் பேரவைத் தோ்தல் நடைபெற்றதில் இருந்து அதிகபட்ச வாக்குப்பதிவு இது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 பேரவைத் தோ்தலை ஒப்பிடுகையில் 9.6 சதவீதம் அதிகம் என்று மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வினோத் சிங் கன்ஜியால் தெரிவித்தாா். இத்தகைய அதிகபட்ச வாக்குப்பதிவு தங்களுக்கே சாதகம் என்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணியும் பரஸ்பரம் நம்புகின்றன.

8 தொகுதிகளில் இடைத்தோ்தல்

பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் அடங்கிய 8 பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ்-48.42%, ஒடிஸாவின் நுவாபடா-77.93%, பஞ்சாபின் தரன் தாரன்-60.95%, ராஜஸ்தானின் அன்தா-79.37%, ஜாா்க்கண்டின் காட்சிலா-74.54%, மிஸோரமின் தம்பா-82.34%, ஜம்மு-காஷ்மீரின் நக்ரோட்டா-74.62%, பட்காம்-49.92% வாக்குகள் பதிவாகின. இத்தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நவ.14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com