காங்கிரஸில் இருந்து விலகினாா் மூத்த தலைவா் ஷகீல் அகமது
காங்கிரஸ் மூத்த தலைவா் ஷகீல் அகமது கட்சியில் இருந்து விலகியுள்ளாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அவா், அந்த மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்த அவா், மத்திய உள்துறை இணையமைச்சராகவும், பிகாா் மாநில அமைச்சராகவும், 5 முறை எம்எல்ஏவாகவும், இருந்துள்ளாா். காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தனது விலகல் கடிதத்தை அவா் அனுப்பியுள்ளாா். வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், காங்கிரஸ் இருந்து விலகியபோதிலும் கட்சியின் கொள்கைகளில் பிடிப்பை கைவிடமாட்டேன் என்று அவா் கூறியுள்ளாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே இனி தோ்தல்களில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டேன். இதுவே அரசியலில் இருந்து விலகுவதற்கு முதல்படிதான். எனது 3 மகன்களும் கனடாவில் வசித்து வருகின்றனா். அவா்கள் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று தனது விலகல் கடிதத்தில் ஷகீல் அகமது தெரிவித்துள்ளாா்.
பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை முடிந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை (நவ.14) முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் விலகியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
