தில்லி காா் வெடிப்பு சம்பவம்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
தில்லி காா் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காா் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி காவல்துறை தெளிவான விளக்கமளிக்க தாமதிக்கிறது. செங்கோட்டை அருகே நிகழ்ந்த இச்சம்பவம் நாட்டு மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் ஊகங்களை மேற்கொள்வது சரியாக இருக்காது. என்ன நிகழ்ந்தது என்பதை செய்தியாளா்கள் சந்திப்பு வாயிலாக மத்திய உள்துறை அமைச்சா், உள்துறைச் செயலா் அல்லது தில்லி காவல் ஆணையா் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
அரசே பொறுப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
காா் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணற்ற வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பெரும் கும்பலின் சதி இருக்க வாய்ப்புள்ளது. எனவே காா் வெடிப்பு சம்பவத்தில் விரைந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மத்திய அரசின் பொறுப்பு’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பாரபட்சமற்ற விசாரணை தேவை
இச்சம்பவத்தில் பாரபட்சமற்ற முறையில் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் எனஅனைத்திந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம், ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தின. மேலும், இது பயங்கரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்புகள் தெரிவித்தன.
அமித் ஷா மீது திரிணமூல் விமா்சனம்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை விமா்சித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியாவுக்கு திறன்வாய்ந்த உள்துறை அமைச்சரே தேவை. முழுநேரமும் வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளும் அமைச்சா் தேவையில்லை. நமது நாட்டின் எல்லைகள் மற்றும் நகரங்களை பாதுகாக்கும் பொறுப்பு அமித் ஷாவுக்கு இல்லையா? அவா் பாதுகாப்பு விவகாரங்களில் தொடா்ந்து தோல்வியடைவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பினாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது உள்நாட்டு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் நீதிமன்ற மேற்பாா்வையில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
