தில்லி கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணை தொடக்கம்

தில்லி செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதால், அந்த வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தில்லி கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணை தொடக்கம்
தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்.
Published on
Updated on
3 min read

நமது நிருபர்

தில்லி செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதால், அந்த வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

கார் வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-இல் இருந்து செவ்வாய்க்கிழமை 12-ஆக அதிகரித்தது.

முன்னதாக, கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறை பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையில், அதை குண்டுவெடிப்பு என்று குறிப்பிட்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) பிரிவுகளின் கீழும் வெடிமருந்துகள் சட்டப் பிரிவுகளின் கீழும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது குற்றஞ்சாட்டியிருந்தது.

அமித் ஷா ஆய்வு: இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை காலையிலும், பிற்பகலிலும் இரண்டு உயர்நிலைக் கூட்டங்கள் நடந்தன. இவற்றில் மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன், மத்திய உளவுத் துறை இயக்குநர் தபன் தேகா, தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் சதானந்த் வசந்த் தத்தே, தில்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஆகியோர் கலந்து கொண்டனர். ஜம்மு - காஷ்மீர் காவல் துறை தலைமை இயக்குநர் நலின் பிரபாத் காணொலி காட்சி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கார் வெடிப்பு பின்னணி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை நிலவரம் மற்றும் சந்தேக நபர்களின் பின்புலம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்களை இக்கூட்டத்தில் மத்திய, மாநில காவல் படைகளின் அதிகாரிகள் அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கினர்.

உத்தரவு: இதைத் தொடர்ந்து கார் வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.

மேலும், தில்லி கார் வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைவசம் ஒப்படைக்க மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

சிசிடிவி காட்சிகள்: இதற்கிடையே, வெடிப்புக்குள்ளான ஐ20 ரக காரை ஓட்டிய நபரின் பெயர் உமர் நபி என்பதையும் பலியான 12 பேரில் அவரும் ஒருவர் என்பதையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அமோனியம் நைட்ரேட், ரசாயனக்கலவை போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சம்பவப் பகுதியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சேகரித்துள்ள மாதிரிகளின் பரிசோதனைக்குப் பிறகே முழு விவரமும் தெளிவாகும் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, வெடித்த காரில் இருந்த உமர், செங்கோட்டை அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்ததும், 11 மணி நேரம் அந்த வாகனத்தை இயக்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உமர் நபி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அங்குள்ள அவரது பெற்றோரின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்த என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தில்லியை அடுத்த ஃபரீதாபாத்தில் 300 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்துகள் உள்பட மொத்தம் 2,900 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே நாள் மாலையில் தில்லியில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதால், இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் குறித்து புலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக, காஷ்மீர், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகியவற்றில் ரகசியமாகச் செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது (ஜேஇஎம்) மற்றும் கஸôவத் உல் ஹிந்த் போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் மூன்று மருத்துவர்கள் உள்பட மொத்தம் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

உஷார் நிலை: இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக தலைநகர் தில்லி தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளது. சம்பவம் நடந்த செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சம்பவப் பகுதி அமைந்த சாலையை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகருக்குள் வரும் வெளி மாநில வாகனங்களின் தணிக்கை மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிதறிய உடல் பாகங்கள், உடலில் பச்சை குத்தப்பட்ட தடயம், சம்பவ நாளில் அணிந்திருந்த ஆடைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உடல்களை உறவினர்கள் கண்ணீர் மல்க அடையாளம் காண மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

சதிகாரர்கள் தப்ப முடியாது

"தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகள் முழுமையாக விசாரிக்கும்; இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் யாரும் தப்பிக்க முடியாது' என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.

பூடானுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் மிகவும் கனத்த இதயத்துடனே இங்கு வந்துள்ளேன். தில்லியில் திங்கள்கிழமை நிகழ்ந்த கொடூரமான சம்பவம், ஒவ்வொருவரையும் கடுந்துயரில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து முகமைகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் திங்கள்கிழமை இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். இப்போதும் ஆலோசனைகள் தொடர்கின்றன. தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பிரதமர் ஆவேசம்...: தில்லி சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தின் அடியாழம் வரை புலனாய்வு அமைப்புகள் தீர விசாரிக்கும். எனவே, சதிகாரர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்என்றார். நிகழ்ச்சியில் ஹிந்தியில் உரையாற்றிய அவர், இந்த வரிகளை மட்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.

முன்னதாக, தில்லி கார் வெடிப்பில் உயிரிழந்தோருக்கு பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com