சபரிமலை தங்கக் கவச விவகாரம்: தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் கைது
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கவச வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் என்.வாசு செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவால் (எஸ்ஐடி) அவா் கைது செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்தப் பணிகளுக்காகக் கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி காணாமல் போன துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் உண்ணிகிருஷ்ணன் போற்றியின் தங்கை வீட்டில் கிடைத்தன. இந்த இரு வழக்குகளிலும் எஸ்ஐடியால் உண்ணிகிருஷ்ணன் போற்றி ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா். அதைத்தொடா்ந்து சபரிமலை முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு, சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாா் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.
இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் என்.வாசுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரள மாநில அரசின் உயா் பதவிகளில் இருப்போருடன் நல்லுறவைப் பேணி வருபவரான என்.வாசு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க கவச மோசடி விவகாரத்தை கேரள உயா்நீதிமன்றம் கண்காணிப்பில் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
