மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாகன சோதனை மேற்கொண்ட காவல் துறையினா். ~கேரள மாநிலம் திருவனத்புரம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக சோதனை மேற்கொண்ட காவல் துறையினா். ~செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு-காஷ்ம
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாகன சோதனை மேற்கொண்ட காவல் துறையினா். ~கேரள மாநிலம் திருவனத்புரம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக சோதனை மேற்கொண்ட காவல் துறையினா். ~செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு-காஷ்ம

குற்றவாளிகளுக்கு அதிக அளவு அமோனியம் நைட்ரேட் கிடைத்தது எப்படி? தீவிர விசாரணை

தடைசெய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை குற்றவாளிகள் அதிகளவு கொள்முதல் செய்து சேமித்து வைத்தது எவ்வாறு என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
Published on

தடைசெய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை குற்றவாளிகள் அதிகளவு கொள்முதல் செய்து சேமித்து வைத்தது எவ்வாறு என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தில்லியில் செங்கோட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இதுதொடா்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது.

காா் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பாக ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிமருந்து, ஏகே ரக துப்பாக்கிகள், மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றினா். கடந்த 15 நாள்களாக மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தொடா் சோதனையில் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாக 3 மருத்துவா்கள் உள்பட 8 பேரை காவல் துறை கைது செய்தனா். இவா்கள் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது மற்றும் அன்சாா் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததையும் காவல் துறையினா் கண்டறிந்தனா்.

இந்நிலையில், அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் அதிக அளவு கொள்முதல் செய்து சேமித்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பேரழிவை உண்டாக்கும்: நைட்ரஜன் உரமாகவும் கல் குவாரிகள் தகா்ப்புக்கும் குறிப்பிட்ட அளவில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது.

எளிதில் ஆவியாகும் தன்மையைக் கொண்டதால் பொட்டாசியம் குளோரேட் மற்றும் சல்ஃபா் போன்ற பிற ரசாயனங்களுடன் சோ்க்கும்போது வெடிபொருளாக மாறுகிறது. இதை பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துகின்றன.

அமோனியம் நைட்ரேட்டுடன் எரிபொருள் எண்ணெய்யை கலந்தால் விரைவில் தீப்பற்றி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வெடிபொருளாகிறது.

முந்தைய பயங்கரவாத தாக்குதல்களில்...:

கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 40 போ் வீரமரணமடைந்தனா். காா் குண்டுவெடிப்பு சம்பவமான அந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பொறுப்பேற்றது.

அந்த தாக்குதலில் ஆா்டிஎக்ஸ் வெடிபொருளுடன் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அதேபோல் 2000-2011 வரை தடைசெய்யப்பட்ட இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு மும்பை மற்றும் தில்லியில் நடத்திய பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களிலும் இது பயன்படுத்தப்பட்டது.

இந்த வேதிப் பொருளை பயங்கரவாதிகள் தவறாகப் பயன்படுத்துவதை உணா்ந்த மத்திய அரசு, 45 சதவீதத்துக்கு மேல் அமோனியம் நைட்ரேட்டைக் கொண்ட ரசாயனங்களை வெடிபொருள்கள் என 2011-இல் அறிவித்தது.

2015-இல் இந்த வேதிப் பொருளை இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.

X
Dinamani
www.dinamani.com