

பூடானில் நீர்மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 11) தொடக்கி வைத்தார்.
இந்தியாவின் உதவியுடன் பூடானில் கட்டமைக்கப்பட்ட 1,020 மெகாவாட் திறன்கொண்ட மிகப் பெரிய நீா்மின் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியெல் வாங்சுக்கும் உடன் இருந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,
''இந்தியா - பூடான் கூட்டாண்மையின் முக்கிய தூணாக எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளது. புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை இன்று நாங்கள் தொடங்கி வைத்தோம். இது நமது நாடுகளுக்கு இடையிலான நட்பின் நீடித்த சின்னமாகும். வளர்ச்சியை ஊக்குவித்தல், நட்பை ஆழப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மை நோக்கி நமது உறவு நகர்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பூடானைச் சேர்ந்த டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன், 570 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத் திட்டத்திற்கு அதானி பவர் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இரு நிறுவனங்களிடையே மின்சார கொள்முதலுக்கும் உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் தோபே மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி முன்னிலையில் டிரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் - அதானி பவர் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் பிரம்மபுத்திராவில் இருந்து பிரிந்து செல்லும் பூடானின் வாங்சு நதி அணையில் கட்டப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படவுள்ளது. வாங்சு நதியில் மின்சாரம் தயாரிப்பதற்காக நீர்மின் நிலையம் அமைக்க ரூ. 60 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்புக்கு ஆதரவு? சமூக வலைதளங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.