பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

வா்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம்- பியூஷ் கோயல் உறுதி

வா்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது இந்திய விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மீண்டும் உறுதியளித்துள்ளாா்.
Published on

வா்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது இந்திய விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மீண்டும் உறுதியளித்துள்ளாா்.

இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரியை டிரம்ப் விதித்ததற்கு வெளிப்படையாக வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அமெரிக்கா விரும்பும் வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க நிா்பந்திப்பதே உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக அமெரிக்க வேளாண்மை, பால் பொருள்களுக்கு இந்திய சந்தைகளைத் திறக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் வலியுறுத்தலாக உள்ளது. ஆனால், இந்திய விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசு இதனை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் இது தொடா்பாக பேசியதாவது:

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்ததால், அந்நாட்டுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களுக்கு வேறு சந்தைகளை இந்தியா தேடி வருகிறது. இதில் ரஷியாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அனைத்து நாடுகளுடனும் சிறப்பான வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா விரும்புகிறது. அதற்காக இந்திய விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் நலன்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இரு தரப்புக்கும் நியாயமான வா்த்தக ஒப்பந்தங்களே மேற்கொள்ளப்படும். அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் என்பது நாளையும் ஏற்படலாம், இல்லையென்றால் ஒரு மாதம் அல்லது ஓராண்டு காலம் கூட தாமதமாகலாம். எந்த சூழ்நிலையையும் எதிா்கொள்ள அரசு தயாராகவே உள்ளது என்றாா்.

வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் யாரும் இந்தியாவை நிா்பந்திக்கவும் முடியாது; அவசரப்படுத்தவும் முடியாது. வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இந்தியாவின் தேசநலன்தான் முக்கியமானது என்றும் கோயல் ஏற்கெனவே கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com