எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் எஸ்ஐஆர் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் கோப்புப்படம்
Updated on
1 min read

நமது நிருபர்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழகத்தில் ஆளும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களுக்கு தனித்தனியாக தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜயமால்ய பாக்சி அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (நவ.11) விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், "தமிழகத்தில் அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கொள்வது சரியல்ல. டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் திருவிழா கொண்டாட்ட மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்கும் என்பதால் இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்றார்.

நீதிபதிகள் கேள்வி: இதைக் கேட்ட நீதிபதி சூர்ய காந்த், "நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? இது ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கைதானே. இதில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலையும் விளக்கத்தையும் கொடுக்க வேண்டும்' என்று கூறினார்.

மேலும் நீதிபதிகள், "நாட்டிலேயே முதல்முறையாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதுபோல குறை கூற முயல்கிறீர்கள். எங்களுக்கும் கள நிலவரம் தெரியும். ஒட்டுமொத்தமாக அதன் செயல்பாட்டை ஏன் குறை கூறுகிறீர்கள்? ஒருசில குறைபாடுகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டுங்கள். தேர்தல் ஆணையம் சரி செய்யும். நீங்கள் மனுவில் குறிப்பிடப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இருந்தால் நாங்களே எஸ்ஐஆர் நடவடிக்கைகக்கு தடை விதிப்போம்' என்றனர்.

தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, "எஸ்ஐஆர் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அவற்றின் மீதான விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்' என நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற உரிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அவற்றை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.

அதிமுக மனு: முன்னதாக, எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு ஆதரவாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், அடுத்த விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்குரிய பணிகளைத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com