Supreme Court
உச்சநீதிமன்றம்ANI

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பல்வேறு மாநிலங்கள் இயற்றிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்குத் தடை கோரிய மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
Published on

பல்வேறு மாநிலங்கள் இயற்றிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்குத் தடை கோரிய மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இயற்றிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனுக்கள் தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்கக் கோரி அந்த மாநிலங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த மாநிலங்களின் பதில் பெறப்பட்டவுடன், அச்சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுக்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த மனுக்கள் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது. மனுதாரா்களில் ஒருவரின் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா், ‘மனுக்களை அடுத்த வாரம் அவசர விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று கோரினாா்.

அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘நான் பிற வழக்குகளில் தீா்ப்பு எழுத வேண்டியுள்ளது. எனவே அந்த மனுக்களை அவசர விசாரணைக்குப் பட்டியலிட முடியாது’ என்று தெரிவித்தாா். அந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பரில் மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com