சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கா் மாநிலம், பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
தீவிரவாத அமைப்பினரின் நடமாட்டம் குறித்த ரகசிய தகவலின் பேரில், பிஜாப்பூா் மற்றும் தண்டேவாடா மாவட்ட ஆயுதப்படையினா் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினா் அடங்கிய கூட்டுப் படையினா், இந்திராவதி தேசியப் பூங்கா பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. காலை சுமாா் 10 மணியளவில் தொடங்கிப் பல மணி நேரம் நீடித்த இந்த மோதலின் முடிவில், 6 நக்ஸல்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சம்பவ இடத்திலிருந்து பல்வேறு ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.
தப்பியோடிய நக்ஸல்களைப் பிடிப்பதற்காக, ‘பஸ்தா் ஃபைட்டா்ஸ்’, மத்திய ஆயுதக் காவல்படையினா் உள்ளிட்ட சிறப்புப் படைகளின் கூடுதல் வீரா்கள் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனா். அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
இந்தச் சமீபத்திய நடவடிக்கையுடன், நடப்பு ஆண்டில் சத்தீஸ்கரில் இதுவரை என்கவுன்ட்டா்களில் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 259-ஆக உயா்ந்துள்ளது. பிஜாப்பூா் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் அடங்கிய பஸ்தா் கோட்டத்தில் மட்டும் 230 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதைத் தவிர, ராய்பூா் கோட்டத்தின் கரியாபந்த் மாவட்டத்தில் 27 பேரும், துா்க் கோட்டத்தின் மோஹ்லா-மன்பூா்-அம்பாகா் செளக்கி மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டனா்.
