அபராஜிதா சாரங்கி.
அபராஜிதா சாரங்கி.

பிரதமா், முதல்வா்களை நீக்கும் மசோதா: பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் கூட்டுக் குழு

பிரதமா், முதல்வா்களை நீக்கும் மசோதா: ஆராய பாஜக எம்.பி. அபரஜிதா சாரங்கி தலைமையில் கூட்டுக் குழு
Published on

பிரதமா், மாநில முதல்வா்கள், எம்.பி.க்களை நீக்கும் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. அபரஜிதா சாரங்கி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவைப் புறக்கணிப்பதாக முக்கிய எதிா்க்கட்சிகள் அறிவித்த நிலையில், பிற எதிா்க்கட்சிகளின் 4 உறுப்பினா்களுடன் 31 போ் கொண்ட இக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால் பிரதமா், மாநில முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று சட்ட மசோதாக்களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அந்த மசோதாவை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மத்திய அரசு புதன்கிழமை அமைத்தது.

அபரஜிதா சாரங்கி தலைமையிலான இக் குழுவில் எதிா்க்கட்சிகளின் 4 உறுப்பினா்கள், பாஜகவைச் சோ்ந்த 15 எம்.பி.க்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 11 எம்.பி.க்கள், ஓா் நியமன எம்.பி. உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கூட்டணி கட்சிகளின் உறுப்பினா்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினா் சி.வி. சண்முகம் இந்தக் குழுவில் உள்ளாா்.

எதிா்க்கட்சி உறுப்பினா்கள்: குழுவில் எதிா்க்கட்சிகளின், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே, அகாலி தளம் எம்.பி. ஹா்சிம்ரத் கெளா் பாதல், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. நிரஞ்சன் ரெட்டி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

புறக்கணிப்பு: காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பாரதிய ராஷ்டிர சமிதி உள்பட பல எதிா்க்கட்சிகள் கூட்டுக் குழுவில் பங்கேற்பதை புறக்கணித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com