பிகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை - வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

பிகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை - வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (நவ.14) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் சீலிடப்பட்டு, பாதுகாப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மையங்களின் உள்பகுதியில் மத்திய ஆயுதக் காவல் படையினரும், வெளிப்பகுதியில் காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 24 மணிநேர சிசிடிவி கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பறையை தினமும் சோதனையிட மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக (121, 122) தோ்தல் நடைபெற்றது. மாநில வரலாற்றில் இல்லாத அளவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிகாரில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்குப் பின் நடைபெற்றுள்ள இத்தோ்தல், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் பலப்பரீட்சையாக பாா்க்கப்படுகிறது.

மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி?: தோ்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளன. மாநிலத்தில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்று முடிந்ததையொட்டி, பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் முதல்வா் நிதீஷ் குமாா் புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

மறு வாக்குப் பதிவு கிடையாது: பிகாா் முதல்கட்டத் தோ்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. இதேபோல், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இரண்டாவது-இறுதிக்கட்ட தோ்தலிலும் எங்கும் மறு வாக்குப் பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

வாக்குப் பதிவு ஆவணங்களின் ஆய்வுக்குப் பின், எந்த வாக்குச்சாவடியிலும் குறைபாடுகளோ, முறைகேடுகளோ கண்டறியப்படவில்லை. இதனால், மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிட வேண்டிய தேவை எழவில்லை.

பிகாரின் அண்மைக்கால தோ்தல் வரலாற்றில் மறு வாக்குப் பதிவு இல்லாத முதல் தோ்தல் இது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com