

ஃபரிதாபாத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களுக்குப் பிறகு முதல் முறையாக, அந்த மருத்துவர்கள் பணியாற்றி வந்த அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம் விளக்கம் கொடுத்துள்ளது.
அல் - ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் பெயரில் துணைவேந்தர் பேராசிரியர் பூபேந்தர் கௌர் ஆனந்த் கையெழுத்திட்டு இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
நடந்து சம்பவங்கள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் அல் - ஃபலாஹ் பல்கலை இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நடந்து வரும் மோசமான நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களை, விசாரணை அமைப்புகள் கைது செய்திருக்கிறது. அவர்களது பணிக்கும், எங்கள் பல்கலைக்கழகத்துக்கும் உள்ள தொடர்பைத் தாண்டி, அவர்களுடன் பல்கலைக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஆனால், சமூக வலைத்தளங்களில், அடிப்படை ஆதாரமற்ற பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அது பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்துக்குள் தடை செய்யப்பட்ட ரசாயன மற்றும் வெடிபொருள்கள் எதையும் கொண்டு வரவோ, பயன்படுத்தவோ, பதுக்கி வைக்கவோ அனுமதியில்லை.
அதுபோல, ஆய்வகப் பணிகள் அனைத்தும், மிகுந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டே நடத்தப்படும், அதனை பல்கலைக்கழக அதிகாரிகள் உறுதி செய்து வருகிறார்கள்.
எனவே, அனைத்து அமைப்புகளும், பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்களைப் பகிரும் முன்பு, அதிகாரப்பூர்வ தகவல்தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் எப்போதும் நாட்டுடன் ஒன்றுபட்டு நிற்கும் என்றும், நாட்டின் ஒற்றுமை, அமைதி, பாதுகாப்புக்காக பல்கலைக்கழகம் பாடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த இரண்டு மருத்துவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது இருப்பிடத்தில் 360 கிலோ வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
மேலும், தில்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு சம்பவத்தில் காரை ஓட்டி வந்த முகமது உமர், அல்-ஃபலாஹ் பல்கலை மருத்துவர் என்பது தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... தற்கொலைக்குத் தூண்டும் சாட்ஜிபிடி! அமெரிக்க நீதிமன்றத்தில் 7 வழக்குகள்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.