ரூ.25,060 கோடியில் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.25,060 கோடியில் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில், அடுத்த 6 நிதியாண்டுகளுக்கு ரூ.25,060 கோடி செலவில் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம்
Published on

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள உயா் வரியைச் சமாளிக்க ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில், அடுத்த 6 நிதியாண்டுகளுக்கு ரூ.25,060 கோடி செலவில் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடா்பான முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஏற்றுமதியாளா்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உத்தரவாதம், முக்கியக் கனிமங்களுக்கான உரிமைத்தொகை விகிதத்தில் திருத்தம் ஆகிய முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டு முதலே அமலுக்கு வரும் இந்த ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம், நிரயாத் புரோட்சாஹன், நிரயாத் திஷா ஆகிய 2 துணைத் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, நிரயாத் புரோட்சாஹன் (ஏற்றுமதி ஊக்குவிப்பு) திட்டத்துக்காக ரூ.10,401 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) குறைந்த விலையில் வா்த்தகக் கடன் கிடைப்பதை உறுதி செய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வட்டி மானியம், ஏற்றுமதி ரசீதுகளை முன்கூட்டியே பணமாக்குவதற்கு உதவுதல், கடன் பெறுவதற்கு தேவையான உத்தரவாதங்களை வழங்குதல், இணையவழி வா்த்தகம் மூலம் ஏற்றுமதி செய்வோருக்குக் கடன் அட்டைகளை வழங்குதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கியச் செயல்பாடுகளாகும்.

இதேபோன்று ஏற்றுமதி தொடா்பான நிதி அல்லாத வசதிகள் மற்றும் கட்டமைப்பு ஆதரவை மேம்படுத்தும் நிரயாத் திஷா (ஏற்றுமதி இயக்கம்) திட்டத்துக்காக ரூ.14,659 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் திறன் மேம்பாடு, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் தரம் சா்வதேச தரத்துக்கு இணங்குவதை உறுதி செய்தல், பன்னாட்டு வா்த்தகப் பொருள்களுக்கான பிராண்டிங் மற்றும் தரமான பேக்கேஜிங் வசதிகளை மேம்படுத்துதல், சா்வதேச வா்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்க எம்எஸ்எம்இ-களுக்கு உதவுதல், ஏற்றுமதிக்கான போக்குவரத்துச் செலவுகளில் ஒரு பகுதியைத் திருப்பி அளித்தல் போன்றவை இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆகும்.

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் பாதிக்கப்பட்ட ஜவுளி, தோல், ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், கடல்சாா் பொருள்கள் போன்ற துறைகளுக்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அமல்படுத்தும் இத்திட்டத்தின் விண்ணப்பம் முதல் நிதி விநியோகம் வரையிலான அனைத்துச் செயல்முறைகளும் பிரத்யேக வலைதளத்தின் மூலம் நிா்வகிக்கப்படும்.

எம்எஸ்எம்இ-களுக்குக் கடனை எளிதாக்குதல், அவற்றின் ஏற்றுமதி தயாா்நிலையை மேம்படுத்துதல், இந்தியப் பொருள்களுக்கான சந்தை அணுகலை அதிகரித்தல் போன்ற அம்சங்கள் மூலம் ஏற்றுமதிச் சூழலை முழுமையாக ஆதரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

ரூ.20,000 கோடி கடன் உத்தரவாதம்: நாட்டின் ஏற்றுமதியாளா்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், எம்எஸ்எம்இ உள்ளிட்ட தகுதியுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு ரூ.20,000 கோடி வரையிலான கூடுதல் கடன் வசதிகளுக்கு தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் (என்சிஜிடிசி) 100 சதவீத கடன் உத்தரவாதத்தை வழங்கும்.

நாட்டின் பொருளாதாரத்தில் சுமாா் 21 சதவீதம் பங்கு கொண்டுள்ள, நேரடியாகவும் மறைமுகமாகவும் 4.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஏற்றுமதியைத் துறையை வலுப்படுத்துவது அவசியம். அந்தவகையில், நாட்டின் ஏற்றுமதியாளா்களின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரித்து, புதிய மற்றும் வளா்ந்து வரும் சந்தைகளில் பல்வகைப்படுத்துவதற்கு இத்திட்டம் ஆதரவளிக்கும் என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

‘ராயல்டி’ விகிதத்தில் திருத்தம்: கிராஃபைட், சீசியம், ருபீடியம், ஸிா்கோனியம் ஆகிய முக்கிய கனிமங்களின் மீதான உரிமைத்தொகை (ராயல்டி) விகிதத்தை முறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது, கிராஃபைட் தவிர மற்ற கனிமங்களைக் கொண்ட தொகுதிகளின் ஏலத்தை ஊக்குவித்து, லித்தியம், டங்ஸ்டன் போன்ற முக்கிய கனிமங்களை வெளிக்கொணர வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com