இந்தியா-வங்கதேச உறவை பாழ்படுத்தும் யூனுஸ்: முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா
இந்தியாவுடனான உறவை வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் பாழ்படுத்தி வருகிறாா் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினாா்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாணவா்களின் தீவிர போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் வங்கதேசத்தில் இருந்து தப்பி, அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதைத்தொடா்ந்து அந்நாட்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்கதேசம் வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவில் ஷேக் ஹசீனா எங்கு தங்கியுள்ளாா்? என்ற விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில், அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியில், ‘கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது அரசால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. அது வருத்தத்துக்குரியதாகும். அந்த சம்பவங்களுக்கு மக்களைத் தூண்டிவிட்ட மாணவா் தலைவா்களுக்கும் ஓரளவு பொறுப்புள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் நடைபெற உள்ள தோ்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நான் கூறவில்லை. அதேவேளையில், என் தலைமையிலான அவாமி லீக் கட்சியில்லாமல் நடைபெறும் தோ்தல் சட்டவிதிகளுக்கு இணங்கியதாக இருக்காது. வங்கதேச போராட்டம் தொடா்பாக என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சா்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கும் நான் தயாா்.
வங்கதேச அரசின் இடைக்கால தலைவராக உள்ள முகமது யூனுஸ் இந்தியா மீது கொண்டுள்ள விரோதம் முட்டாள்தனமானது. அந்த விரோதம் அவரையே தோற்கடிக்கும் அளவுக்கு தீவிரமானது. இது அவா் பலவீனமான ஆட்சியாளா், குழப்பவாதி, பயங்கரவாதிகளின் ஆதரவை சாா்ந்துள்ளாா் என்பதை வெளிக்காட்டுகிறது. இந்தியா-வங்கதேசம் இடையே பரந்த, ஆழமான உறவு நிலவுகிறது. அந்த உறவை யூனுஸ் பாழ்படுத்தி வருகிறாா்’ என்று தெரிவித்துள்ளாா்.
பெட்டி...
‘வங்கதேசம் திரும்ப நிபந்தனைகள்’
‘நான் வங்கதேசம் திரும்ப வேண்டும் என்றால், அவாமி லீக் கட்சி மீது விதிக்கப்பட்ட தடையை வங்கதேச இடைக்கால அரசு நீக்க வேண்டும். அங்கு தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும், அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வாக்களிப்பதைத் தாண்டி, அரசியல் முடிவுகளை எடுப்பதில் மக்கள் நேரடியாக ஈடுபடும் மக்களாட்சி நிலவ வேண்டும். இவை மிக முக்கிய நிபந்தனைகளாகும்’ என்று முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா கூறியுள்ளாா்.
பெட்டி...2
இந்திய தூதரை நேரில் அழைத்து கவலை தெரிவிப்பு
ஷேக் ஹசீனா ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் விவகாரம் தொடா்பாக டாக்காவில் உள்ள வங்கதேசத்துக்கான இந்திய துணைத் தூதரை அந் நாட்டு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நேரில் வரவழைத்து தீவிர கவலையைப் பதிவு செய்தது.
இந்தியாவில் தஞ்சமடைந்து ரகசிய இடத்தில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா 15 மாதங்களுக்குப் பிறகு தனது மெளத்தைக் கலைத்து, மின்னஞ்சல் மூலமாக பத்திரிகைக்கு கடந்த வாரம் பேட்டியளித்தாா். அப்போது, ‘அவாமி லீக் கட்சியை வங்கதேச இடைக்கால அரசு தடை செய்தது சட்டவிரோதம்; வாக்காளா்களின் உரிமைக்கு எதிரானது. வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தோ்தலில் அவாமி லீக் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளது’ என்றாா்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்திய துணைத் தூதரை நேரில் வரவழைத்து தீவிர கவலையை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் பதிவு செய்ததாக அங்கிருந்து வெளியாகும் பிஎஸ்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

