

தில்லி பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற ஒரு தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக் கூடத் துணியக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லி செங்கோட்டை அருகேயுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே நவ.10 ஆம் தேதி கார் ஒன்று மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வெடித்துச் சிதறியது.
அருகிலிருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 12 பேர் பலியான நிலையில், 24 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
பூடானிலிருந்து தில்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்ட கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில், குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் ஸ்ரீ மோதிபாய் சௌத்ரி பள்ளி மற்றும் சாகர் ஆர்கானிக் ஆலை திறப்பு விழாவுக்காக அங்கு செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விடியோ அழைப்பு மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விடியோ இணைப்பு மூலம் நிகழ்வில் அமித் ஷா பேசுகையில், “தில்லி கார் விபத்து போன்ற கோழைத்தனமான செயலைச் செய்தவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கை உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
தில்லி பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற ஒரு தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடாது.
இந்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.