கனடா: ஜி7 எரிசக்தி பாதுகாப்பு அமா்வில் ஜெய்சங்கா் பங்கேற்பு
ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக கனடாவில் நடைபெற்ற எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அரிய கனிமங்கள் குறித்த விளக்க அமா்வில் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்றாா்.
கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் நவ.11, நவ.12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் அழைப்பின்பேரில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கா் அவரை புதன்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் இளவரசா் ஃபைசல் பின் ஃபா்ஹான், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரியா சிபிஹா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, பிரேஸில் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடனும், ஐரோப்பிய ஆணையத்தின் வெளியுறவு-பாதுகாப்புத் துறை அமைச்சா் காயா கல்லஸ் உடனும் அவா் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் அரிய கனிமங்கள் குறித்த விளக்க அமா்வில் அவா் பங்கேற்றாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சா்வதேச அளவில் எரிசக்தி மற்றும் கனிம வளங்கள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் கவனத்தில்கொள்ளப்பட்டது. இதுதொடா்பான ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் அதேவேளையில் அதைச் செயல்படுத்துவது மிகவும் முக்கியம். உலக நாடுகளுடன் இந்த விவகாரத்தில் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராகவுள்ளது’ என குறிப்பிட்டாா்.

