

தில்லி செங்கோட்டை அருகே, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உமர் உன் நபி எழுதியதாகக் கருதப்படும் டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, உமர் நபியின் விடியோ வெளியான நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலிருந்து அவரது டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
அல்-பலாஹ் பல்கலைக்கழக மருத்தவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வளாகத்துக்குள் இருந்த அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாக்டர் முஸாமில் தங்கியிருந்த அறை எண் 13 மற்றும் உமர் தங்கியிருந்த அறை எண் 4 ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் பயங்கரவாத திட்டங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அந்த நோட்டுப் புத்தகங்களில் சில குறியீட்டுச் சொற்களும், பெயர்கள், எண்கள், நவம்பர் 8 முதல் 12ஆம் தேதி வரையிலான தேதிகள் எழுதப்பட்டுள்ளது. இதைக் கொண்டு, மருத்துவர்கள் இந்த தேதிகளில் சில இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முக்கியமாக டைரியில், ஆபரேஷன் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த டைரியில் மட்டும் குறைந்தது 25 - 30 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவர்கள் ஜம்மு - காஷ்மீர், முஸாமில் மற்றும் உமரின் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஃபரிதாபாத் மற்றும் அதனை ஒட்டியுள்ளப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், இதன் மூலம், வெள்ளை கோட் பயங்கரவாத மாடலின் நெட்வொர்க் பற்றி விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு தெளிவு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அல் - பலாஹ் மருத்துவமனையின் கம்பவுண்டர் உள்பட அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தில்லி கார் குண்டு வெடிப்பு நவம்பர் 10ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால் அது அன்றைய தினம் நடப்பது திட்டத்தில் இல்லை. இவர்கள் நவ. 8 - 12ஆம் தேதிகளில் மிகப்பெரிய சதிச் செயலை திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கைது நடவடிக்கையால் அவர்களது திட்டம் சீர்குலைந்ததே, நவ.10 தாக்குதலுக்குக் காரணமாகிவிட்டது என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.
மேலும், குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என கருதப்படும் உமர் வாங்கியிருந்த மற்றொரு சிவப்பு நிறக் கார் நேற்று மாலை ஹரியாணாவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கார் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாக அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு, காருக்குள் வெடிபொருள்கள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் காரும் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தவே வாங்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.
ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் முஸாமில் கடந்த மாதம் அக்.30ஆம் தேதி கைது செய்யப்படுகிறார், அவரது கைதைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளி உமர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். மீண்டும் அவர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பவில்லை. நவ. 10 தில்லியில் தாக்குதல் நடத்தியிருக்கிறார். எனவே, கடந்த 10 நாள்களும் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிக்க.. தில்லி கார் வெடிப்பு! முக்கிய குற்றவாளி உமர் விடியோ வெளியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.