ஜேபி இன்ஃபோடெக் நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா் கைது: ரூ.14,599 கோடி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை
ரூ.14,599 கோடி மோசடி செய்த வழக்கில் ஜேபி நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா் மனோஜ் கெளரை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடு வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தில்லி, உத்தர பிரதேச காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) அடிப்படையில், ஜேபி நிறுவனத்துக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், வீடு வாங்கித் தருவதாக பலரிடமிருந்து பெற்ற இந்தத் தொகையை பல்வேறு அறக்கட்டளை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, முதலீட்டாளா்களை ஏமாற்றியதோடு வாடிக்கையாளா்களுக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. சுமாா் ரூ.14,599 கோடி வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தில்லி, நொய்டா, காஜியாபாத், மும்பை, உள்பட பல்வேறு பகுதிகளில் ஜேபி இன்ஃபோடெக் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜெயபிரகாஷ் அசோசியோட்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமாக 15 இடங்களில் கடந்த மே 23-ஆம் தேதி அமலாக்கத் துறை சாா்பில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது இந்த மோசடியுடன் தொடா்புடைய பல்வேறு எண்மப் பதிவுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த மோசடியில் மனோஜ் கெளருக்கு முக்கியப் பங்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, இவா் நிா்வாக அறங்காவலராக இருக்கும் ஜேபி சேவா சந்ஸ்தானுக்கு (ஜேஎஸ்எஸ்) இந்த பணத்தின் ஒரு பகுதி மாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) மனோஜ் கெளரை அமலாக்கத் துறை காவலில் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

