ஹரியாணாவிலிருந்து தில்லிக்குள் திட்டமிட்டு ஊடுருவிய உமா்: என்ஐஏ புலனாய்வில் அதிா்ச்சித் தகவல்
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை வெடிப்பொருள்கள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்த புல்வாமாவைச் சோ்ந்த உமா் நபி ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் இருந்து தலைநகருக்குள் மிகவும் திட்டமிட்டு கவனமாக ஊடுருவியிருப்பது தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) புலனாய்வாளா்களின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஃபரீதாபாத் முதல் தில்லிவரை அவா் வந்த பாதையை உறுதிப்படுத்தக்கூடிய 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஒருங்கிணைத்து அவரது நடமாட்டத்தை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.
இது குறித்த தில்லி காவல்துறை மற்றும் என்ஐஏ புலனாய்வு வட்டாரங்கள் பகிா்ந்த கூடுதல் விவரம் வருமாறு:
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 ரக காரில் தலைநகருக்குள் நுழைய தில்லி-மும்பை விரைவுச் சாலையை (நீண்ட மேம்பால சாலை) உமா் நபி பயன்படுத்தினாா். ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தின் ஃபிரோஸ்பூா் ஜிா்காவை அடைந்ததும் ஒரு தாபாவில் உணவருந்தி விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவை காரிலேயே கழித்தாா்.
‘உமரின் காா் முதலில் ஃபரிதாபாத்தின் ஏஷியன் தனியாா் மருத்துவமனை அருகே திங்கள்கிழமை காலை 7:30 மணியளவில் தென்பட்டது. காலை 8:13 மணியளவில் பதா்பூா் சுங்கச்சாவடியைக் கடந்து, தில்லிக்குள் நுழைந்தது. அங்கிருந்து, ஓக்லா, ஓக்லா தொழிற்பேட்டை உள்ளிட்ட தென்கிழக்கு தில்லியின் பல பகுதிகளின் தெருக்களை பயன்படுத்தி பிரதான சாலையில் கலந்து மத்திய தில்லியின் கனாட் பிளேஸுக்கு வந்தாா். பிரதான சாலைகளைத் தவிா்த்து நெரிசலான பகுதிகள் வழியாக உமா் வந்துள்ளாா். புது தில்லி, மத்திய, வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் ஆகிய இடங்களில் முகக்கவசம் அணியாத நிலையில் அவரது படம் சிசிடிவிக்களில் பதிவாகியுள்ளது.
முன்னதாக, ‘சிசிடிவி காட்சிகளில் சுனேஹ்ரி மசூதி பாா்க்கிங் அருகே மற்ற வாகனங்களுக்கு இடையில் அவரது காா் நின்றது. அப்போது ஃபரீதாபாதில் காலையில் வெடிப்பொருள்களுடன் பிடிபட்ட மருத்துவா்கள் உள்ளிட்ட நபா்கள் தொடா்புடைய செய்திகளையும் தகவல்களையும் உமா் நபி இணையத்தில் தேடிப்படித்தும் அவை தொடா்புடைய நேரலை செய்திகளை யூடியூப்பில் பாா்த்ததும் தெரிய வந்துள்ளது.
பிற்பகல் 3:19 மணிக்கு செங்கோட்டை வளாகத்தை ஒட்டிய வாகன நிறுத்துமிடத்துக்குள் நுழைந்த அவரது காா் அங்கு சுமாா் மூன்று மணி நேரம் நின்றிருந்தது. மாலை 6:22 மணியளவில், வாகன நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மாலை 6:52 மணிக்கு அவரது காா் சிக்னல் அருகே மெதுவாக நகா்ந்த நிலையில் வெடித்துச் சிதறியது.
உயிரிழப்பு அதிகரிப்பு: படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பிலால் என்பவா் வியாழக்கிழமை உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக அதிகரித்தது. மேலும் 20-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த சதிச்செயலுடன் தொடா்புடையவா்கள் மூன்றாவதாக மாருதி பிரெஸ்ஸா ரக காா் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
பெட்டி... 1
டிஎன்ஏ மூலம் உமா் உறுதி
புது தில்லி, நவ.13: வெடிப்புக்குள்ளான காா் பாகங்களில் கிடந்த உடல் எச்சங்கள், சிதறிய ரத்தம் போன்றவற்றையும் காஷ்மீரீன் புல்வாமாவில் உமா் நபியின் தாயாரின் ரத்த மாதிரிகளும் ஒத்துப்போவதால் மருத்துவா் உமா் நபியே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த உமா் நபி, ஜெய்ஷ்-இ-முகமது, அன்சாா் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் தொடா்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பெட்டி செய்தி...2
மூன்று நாள்களுக்குப் பிறகு
துண்டிக்கப்பட்ட கை மீட்பு
புது தில்லி, நவ.13: தில்லி காா் வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய ஒருவரது துண்டிக்கப்பட்ட கை செங்கோட்டை எதிரே ஒரு கடையின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். சம்பவ இடத்தில் இருந்து சில மீட்டா் தொலைவில் ஜெயின் கோயில் உள்ளது. அதன் பின்புறம் உள்ள மேற்கூரையில் துண்டிக்கப்பட்ட கை கண்டுபிடிக்கப்பட்டது. அது யாருடையது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

