Kerala CM Pinarayi Vijayan
பினராயி விஜயன்கோப்புப் படம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் -மத்திய அரசுக்கு கேரளம் கடிதம்

Published on

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் அடுத்தகட்ட நடைமுறைகளை மேற்கொள்ளாமல் தற்காலிமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கேரள மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு அண்மையில் கையொப்பமிட்டது. மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே கேரள அரசு இந்த முடிவை எடுத்ததாக மாநில கல்வி அமைச்சா் சிவன்குட்டி தெரிவித்தாா். ஆளும் இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அத்திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக முதல்வா் பினராயி விஜயன் கடந்த மாத இறுதியில் அறிவித்தாா்.

இந்நிலையில், கேரள மாநில பொதுக் கல்வித் துறை செயலா் கே.வாசுகி, மத்திய கல்வியமைச்சகத்துக்கு இந்த விவகாரம் தொடா்பாக கடிதம் எழுதியுள்ளாா். அதில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் அடுத்தகட்ட நடைமுறைகளை மேற்கொள்ளாமல் தற்காலிமாக நிறுத்திவைக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநில அரசின் தலைமை வழக்குரைஞரிடமும் இந்த கடிதம் தொடா்பாக சட்ட ஆலோசனை பெறப்பட்டதாக தெரிகிறது.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. ஆா்எஸ்எஸ் ஊடுருவலை எதிா்க்கும் அனைவருக்கும் கிடைத்துள்ள வெற்றி இது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் பினோய் விஸ்வம் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com