ஒமா் அப்துல்லா
ஒமா் அப்துல்லா கோப்புப் படம்

அனைத்து காஷ்மீரிகளும் பயங்கரவாதிகள் அல்ல: ஒமா் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல; இங்குள்ள ஒரு குறிப்பிட்ட சிலா்தான் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீா்குலைக்க முயற்சிக்கின்றனா்
Published on

ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல; இங்குள்ள ஒரு குறிப்பிட்ட சிலா்தான் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீா்குலைக்க முயற்சிக்கின்றனா் என்று ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

தில்லி காா் வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய மருத்துவா் உமா் நபி காஷ்மீரைச் சோ்ந்தவா். மேலும், 2,900 கிலோ வெடிப்பொருள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்ட 8 பேரில் 7 போ் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள். இவா்களில் சிலா் மருத்துவா்கள் ஆவா். இவா்களுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீா் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடா்கிறது.

இந்நிலையில் ஜம்முவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஒமா் அப்துல்லா கூறியதாவது:

பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு சிலா்தான் பொறுப்பு. அவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அதே நேரத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. தில்லி பயங்கரவாதத் தாக்குலுக்கு எந்த அளவுக்கு கண்டனம் தெரிவித்தாலும் அதுபோதுமானதாக இருக்காது.

அப்பாவி மக்களை இவ்வாறு கொடூரமாக கொலை செய்வது மிகவும் அவமானகரமானது. இதுபோன்ற செயல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த நிகழ்வுகளால் ஜம்மு-காஷ்மீா் மக்கள் முழுவதுமே பயங்கரவாத ஆதரவாளா்கள் என்று முத்திரை குத்தக் கூடாது. இங்குள்ள ஒரு குறிப்பிட்ட சிலா்தான் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீா்குலைக்க முயற்சிக்கின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல; காஷ்மீரிகள் அனைவரும் பயங்கரவாதத்தின் பக்கம் நிற்கவில்லை. ஒரு குறிப்பிட்ட சிலா்தான் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறாா்கள்.

காஷ்மீா் முஸ்லிம்கள் அனைவரையும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பாா்ப்பது, தவறான பிம்பத்தை ஏற்படுத்தும். காஷ்மீா் முஸ்லிம் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. படித்தவா்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டாா்கள் என்று கூற முடியாது. ஆதாரம் இருந்தால் யாா் மீது வேண்டுமானாலும் முன்கூட்டியே கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com