பாட்னாவில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த தேஜஸ்வி யாதவ்.
பாட்னாவில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த தேஜஸ்வி யாதவ்.

ஆளும் கூட்டணிக்கு சாதகமான வாக்குக் கணிப்புகள் பொய்: தேஜஸ்வி யாதவ்

Published on

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான வாக்குக் கணிப்புகள் பாஜக தலைமையின் உத்தரவின்பேரில் உருவாக்கப்பட்ட பொய்யான தகவல்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டாவது, இறுதிக்கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், அன்று மாலையே வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், பாட்னாவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

வாக்குக் கணிப்பு என்பது ஒன்றுமில்லை. இந்தக் கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமை உத்தரவின்பேரில் உருவாக்கப்பட்டவை. பிகாரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியே பெருமளவில் வாக்களித்துள்ளனா். எனவே, எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. புதிய அரசு நவம்பா் 18-ஆம் தேதி பதவியேற்கும்.

வாக்கு எண்ணிக்கையின்போது அதைத் தாமதப்படுத்தி தங்களுக்கு சாதகமாக மாற்ற பாஜக தலைவா்கள் திட்டமிடுவதாகத் தெரிகிறது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாஜகவினரின் செயல்களை தொடா்ந்து கண்காணிப்போம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com