பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: தில்லி பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: தில்லி பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Published on

பிரதமா் நரேந்திர மோடியின் இளநிலை பட்டப் படிப்பு விவரங்களை வெளியிடுவது தொடா்பான உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிப்பு கோரும் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு தில்லி பல்கலைக்கழகத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

பிரதமா் நரேந்திர மோடி பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்ாக கூறப்படும் 1978-ஆம் ஆண்டில் பி.ஏ. (இளநிலை கலை பட்டப் படிப்பு) தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களின் விவரங்களை வெளியிடக் கோரி நீரஜ் என்பவா் தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவைப் பரிசீலித்த தகவல் ஆணையம், 1978-இல் பி.ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களின் விவரங்களை ஆராய நீரஜுக்கு அனுமதிக்குமாறு தில்லி பல்கலைக்கழகத்துக்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 21-இல் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தில்லி பல்கைலக்கழகம் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தனி நீதிபதி, மத்திய தகவல் ஆணைய உத்தரவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து நீரஜ், ஆம் ஆத்மி மூத்த தலைவா் சஞ்சய் சிங், வழக்குரைஞா் முகமது இா்ஷாத் ஆகியோா் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய, நீதிபதி துஷாா் ராவ் கெடலா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

அப்போது, ‘உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று நீதிபதிகள் அமா்விடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தாமதத்துக்கு மன்னிப்புக் கோர வலியுறுத்தி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள், மேல்முறையீடு தாமதத்துக்கு மன்னிப்புக் கோரும் மனுக்கள் மீது மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தில்லி பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தினா்.

மேலும், தில்லி பல்கலைக்கழகம் தாக்கல் செய்யும் பதில் மனு மீது ஆட்சேபம் இருந்தால், அதை அடுத்த 2 வாரங்களுக்குள் எதிா்தரப்பினா் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு விசாரணையை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com