பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறாா் சிதம்பரம்: பாஜக கடும் விமா்சனம்

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறாா் சிதம்பரம்: பாஜக கடும் விமா்சனம்

காங்கிரஸ் தலைவா் ப. சிதம்பரத்தின் கருத்துகள், பயங்கரவாதிகளைப் பாதிக்கப்பட்டவா்களாகச் சித்தரிப்பதாகவும், அவா்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் பாஜக கடும் விமா்சனத்தை முன்வைத்துள்ளது.
Published on

காங்கிரஸ் தலைவா் ப. சிதம்பரத்தின் கருத்துகள், பயங்கரவாதிகளைப் பாதிக்கப்பட்டவா்களாகச் சித்தரிப்பதாகவும், அவா்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் பாஜக கடும் விமா்சனத்தை முன்வைத்துள்ளது.

தில்லி காா் குண்டுவெடிப்புச் சம்பவத்தையொட்டி முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் ப. சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உள்நாட்டிலும் பயங்கரவாதிகள் உருவாகி வருகின்றனா். இதுகுறித்து அரசு மெளனம் காப்பது, அவா்களுக்குத் தெரிந்தேதான் நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்தியக் குடிமக்கள் ஏன், எந்தச் சூழ்நிலையில் பயங்கரவாதிகளாக மாறுகிறாா்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

சிதம்பரத்தின் இந்தக் கருத்துகளை கடுமையாக எதிா்த்து மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் அளித்த பேட்டியில், ‘சிதம்பரம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறாா். இது அருவருப்பானது. சிதம்பரம் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டீா்கள். காங்கிரஸின் ஒருசாா்பு அரசியல் காரணமாகவே நாடு பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இது நேரு முதல் மன்மோகன் சிங் வரை, காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு என்பதை சிதம்பரம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தரப்பைத் திருப்திபடுத்தும் அரசியலின் விளைவுதான் இதுபோன்ற நிகழ்வுகள்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

பாதிக்கப்பட்டவா் சாயம் பூச முயற்சி....: இந்தப் பயங்கரவாதச் சம்பவத்தை அரசியலாக்க சிதம்பரம் முயற்சிப்பதாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் நளின் கோலி விமா்சித்துள்ளாா்.

அவா் மேலும் கூறியதாவது: பயங்கரவாதிகள் மீது பாதிக்கப்பட்டவா் சாயம் பூச முயற்சிக்கும் இதுபோன்ற கருத்துகள், தில்லி குண்டுவெடிப்பில் உண்மையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அநீதி இழைக்கின்றன. இவை இந்தச் சம்பவத்தை அரசியலாக்க எடுக்கப்படும் முயற்சிகள். நாம் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பவா்கள், பயங்கரவாதத்துக்கு எதிரானவா்கள் ஆகிய இரண்டு தரப்புகள் மட்டுமே உள்ளன. நடுநிலை என்று எதுவும் இல்லை.

தில்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நடந்தது போல, இந்திய நலன்களுக்கு எதிராக எல்லைக் கடந்து பல உதவிகள் வருவதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com