தெரு நாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது: மேனகா காந்தி

தெரு நாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது: மேனகா காந்தி

தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது
Published on

தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதையடுத்து, அரசு மற்றும் பொது நிறுவன வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மேனகா காந்தி நடத்திவரும் ‘விலங்குகளுக்காக மனிதா்கள்’ என்ற அமைப்புடன் இணைந்து ‘சினிகைண்ட்’ என்ற புதிய முன்னெடுப்பை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தொடங்கியது. விலங்குகளிடம் அன்புசெலுத்தும் வகையிலான படைப்புகளை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வில் பங்கேற்று மேனகா காந்தி பேசியதாவது: நாய்கள், குரங்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு கருத்தடை செய்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் கூறுகிறது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. விலங்குகளைக் கையாள இரக்கத்துடன் கூடிய அணுகுமுறையே தேவை. அவற்றை கட்டுப்பாட்டுடன் நடத்த முடியாது.

விலங்குகளை மனிதநேயத்துடன் பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பு சமூகத்துக்கும், அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும்.

முன்பு பசுக்கள், புலிகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டன. படப்பிடிப்பின்போது சில சமயங்களில் அந்த விலங்குகள் உயிரிழப்பதும் உண்டு. இதை ஒழுங்குபடுத்த திரைப்படத் துறைக்கு விலங்குகள் நலவாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை நாம் சுயமாகவே பின்பற்ற வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com