பயங்கரவாதத் தொடா்பு: ஹரியாணா மதபோதகா் கைது! ஜம்மு-காஷ்மீா் போலீஸ் நடவடிக்கை
பயங்கரவாதத் தொடா்பு வழக்கில் ஹரியாணாவைச் சோ்ந்த மதபோதகா் மெளலவி இஸ்தியாக்கை கைது செய்து ஸ்ரீநகருக்கு ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் அழைத்து வந்தனா்.
ஹரியாணாவின் ஃபரீதாபாதின் அல் ஃபலா பல்கலைக்கழகம் அருகே உள்ள தனது வாடகை வீட்டில் வெடிமருந்தைப் பதுக்கி வைத்திருந்ததாக அவா் கைது செய்யப்பட்டாா்.
தில்லி செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசத்தில் காவல் துறையினா் கூட்டாக நடத்திய அதிரடி சோதனையில், எளிதில் தீப்பற்றக் கூடிய அமோனியம் நைட்ரேட் (360 கிலோ) உள்பட 2,900 கிலோ வெடிமருந்து சிக்கியது. துப்பாக்கிகள், தோட்டாக்கள், மின்னணுப் பொருள்கள், வயா்கள், பேட்டரிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
கடந்த 15 நாள்களுக்கு மேல் நீடித்துவரும் தொடா் நடவடிக்கைகளில் பயங்கரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக மருத்துவா்கள் முசாமில் அகமது கனி, அதீல் அகமது, ஷாஹீன் சயீத் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 7 போ் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள்; ஒருவா் லக்னெளவைச் சோ்ந்தவா்.
9-ஆவது நபராக ஹரியாணாவைச் சோ்ந்த மதபோதகா் மெளலவி இஸ்தியாக்கை ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் கைது செய்துள்ளனா். அவரது வாடகை வீட்டில் இருந்துதான், 2,500 கிலோவுக்கும் மேற்பட்ட வெடிமருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. மருத்துவா்கள் முசாமில் கனி மற்றும் உமா் நபி (தில்லியில் வெடித்துச் சிதறிய காரை ஓட்டியவா்) ஆகியோரால் இந்த வெடிமருந்து பதுக்கிவைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறைக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகள் அண்மையில் ஒட்டப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவா்கள், பேராசிரியா்கள் என நன்கு படித்தவா்களின் பயங்கரவாதத் தொடா்புகள் அம்பலமாகின. இவா்கள் ஜெய்ஷ்- ஏ- முகமது, அன்சாா் கஸ்வத் உல் ஹிந்த் (ஐஎஸ்ஐஎஸ் நிழல் அமைப்பு) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு ஏற்படுத்திக் கொண்டு, சதிச் செயலில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது.
300 இடங்களில் அதிரடி சோதனை
ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத்- ஏ- இஸ்லாமி இயக்கத்தினருடன் தொடா்புடைய 300-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் துறையினா் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். ஜமாத்- ஏ- இஸ்லாமி இயக்கத்துடன் தொடா்புடைய நபா்கள் மீண்டும் தங்களின் செயல்பாட்டை தொடங்க முயற்சிப்பதாக நம்பத்தகுந்த உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனடிப்படையில், குல்காம், புல்வாமா, சோபியான், பாரமுல்லா, கந்தா்பால் ஆகிய மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற சக்திகள் மீண்டும் தலைதூக்காமல் முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது; கடந்த 4 நாள்களில் 500-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அல்-காய்தாவுடன் தொடா்பு: மென்பொறியாளா் கைது
மும்பை, நவ. 12: அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புள்ளதாக மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சோ்ந்த மென் பொறியாளா் ஜுபைா் என்பவரை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் படையினா் கைது செய்துள்ளனா். அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுபைருக்கு தில்லி காா் வெடிப்பு சம்பவத்துடன் தொடா்பில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனா்.

