குளிா்கால கூட்டத் தொடா் ஏற்பாடுகள்: குடியரசு துணைத் தலைவா் ஆலோசனை
எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், மாநிலங்களவை தலைமைச் செயலா் பி.கே.மோடி ஆகியோருடன் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 15 அமா்வுகள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டதாக மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புகளுக்கு இடையே தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஆகஸ்டில் பதவி விலகிய நிலையில், கடந்த செப்டம்பரில் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, குடியரசு துணைத் தலைவராக தோ்வானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

