

பிகாரில் அமோக வெற்றியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது.
பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 192 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும், தற்போதைய தேர்தல் தேஜ கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 24 இடங்களில் வெற்றியும் ஒரு இடத்தில் முன்னிலையிலும் உள்ளது. காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
பெரும்பாலான இடங்களில் அக்கட்சி டெபாசிட் இழந்தது. அசாதுதீன் ஒவைசி கட்சியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. தோ்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும் என்று தெரிவித்திருந்தன. தற்போது அந்த கணிப்பு நிஜமாகியுள்ளது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக (121, 122) தோ்தல் நடைபெற்றது. இதில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன.
மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29, மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோா்ச்சா 6 இடங்களில் போட்டியிட்டன.
எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.