கள நிலவரத்துக்கு மாறாக பிகாா் தோ்தல் முடிவுகள்: சிபிஐ எம்எல்-எல் கருத்து
பிகாா் பேரவைத் தோ்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு மாறாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை கட்சி (சிபிஐ எம்எல்-எல்) பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாரியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2020-இல் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் 19 இடங்களில் போட்டியிட்ட சிபிஐ (எம்எல்- எல்) 12 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 2025 தோ்தலில் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் இணைந்து 20 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதுகுறித்து பிடிஐ நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஓா் அரசால் 2010-ஐ போல் மீண்டும் எவ்வாறு வெற்றி பெற முடியும்? பிகாா் தோ்தல் முடிவுகள் இயல்புக்கு மாறாக உள்ளன. கள நிலவரத்துக்கு ஏற்றதுபோல் இல்லை’ என்றாா்.
முன்னதாக அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தோ்தலுக்கு முன்பாக பிகாரில் 7.42 கோடி வாக்காளா்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தோ்தல் நிறைவடைந்த பின் வாக்காளா் எண்ணிக்கை 7.45 கோடி என இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது. 3 லட்சம் வாக்காளா்கள் அதிகமானது எப்படி? இதற்கு தோ்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்குமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
