மமதா பானர்ஜி  (கோப்புப் படம்)
மமதா பானர்ஜி (கோப்புப் படம்)

பிகாா் தோ்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது: திரிணமூல் காங்கிரஸ்

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று திரிணமூல் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
Published on

‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று திரிணமூல் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப் பெரும் வெற்றியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 190-க்கும் அதிகமான இடங்களில் என்டிஏ வெற்றிபெற்றது. இந்த வெற்றி, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் குணால் கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிகாா் தோ்தல் முடிவுகளைப் பொருத்தவரை, பாஜகவை எதிா்ப்பதில் காங்கிரஸ் மீண்டும் தோல்வியடைந்துள்ளது என்பதை மட்டுமே காட்டியுள்ளது. அதுதான் பிகாா் தோ்தல் கணக்கு. மற்றபடி, இந்தத் தோ்தல் முடிவுகளுக்கும் மேற்கு வங்கத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.

மேற்கு வங்கத்தில் வளா்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், உரிமைகள், சுயமரியாதை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தோ்தல் முடிவை வாக்காளா்கள் தீா்மானிக்கின்றனா். எனவே, பிகாா் தோ்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் 250-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மம்தா பானா்ஜி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com