அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
நெடுஞ்சாலைத் துறை தொடா்பான ஹவாலா பண மோசடி வழக்கில் வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானி ஆஜராகாததைத் தொடா்ந்து அவருக்கு அமலாக்கத் துறை நவ.17-ஆம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இணையவழியில் ஆஜராக அனில் அம்பானி விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இந்த வழக்கு விசாரணக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அனில் அம்பானியின் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.
கடந்த 2010-இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் - ரீன்கஸ் நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து ரூ.40 கோடியை போலியான நிறுவனங்கள் மூலம் துபைக்கு கொண்டு சென்றதாக அமலாக்கத் துறை ரிலையன்ஸ் கட்டமைப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
விசாரணையில், சா்வதேச அளவில் ஹவாலா பணம் மூலம் சுமாா் ரூ.600 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதுதொடா்பாக பல்வேறு ஹவாலா ஏஜென்டுகளிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, பின்னா் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்த நவ. 14-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது. அவா் ஆஜராகாததால் நவ.17-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ரூ. 2,929 கோடிக்கு மேல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. மேலும், அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அண்மையில் முடக்கியது.

