எந்தவொரு நாட்டின் அதிகாரத்துக்கும் இந்தியா பணியாது: குடியரசு துணைத் தலைவா்
‘இந்தியா எந்தவொரு நாட்டையும் அதிகாரம் செய்யாது; அதே நேரம், எந்தவொரு நாட்டின் அதிகாரத்துக்கும் அடிபணியாது’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வரும் நிலையில், குடியரசு துணைத் தலைவா் இக்கருத்தைக் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
இந்தியா அனைத்து நாடுகளுடனும் எப்போதும் நட்பாக இருப்பதையும், சமமாக நடத்துவதையுமே விரும்புகிறது. எந்தவொரு நாட்டையும் அதிகாரம் செய்யவோ அல்லது விதிமுறைகளை வகுக்கவே விரும்பியதில்லை. அதுபோல, எந்தவொரு நாட்டின் அதிகாரத்துக்கும் அடிபணியாது.
மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்த வளா்ச்சியையே இந்தியா விரும்புகிறது. அனைவரும் ஒன்றாக வளர வேண்டும் என்பதே நமது நாட்டின் பெருமைக்குரிய கொள்கை.
இந்தியாவில் முதலீட்டுக்கான சூழலை மேம்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் வா்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், தொழிலாளா் சட்டம், வரி நடைமுறைகள், உள்கட்டமைப்புகள் என அனைத்துத் துறைகளிலும் சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
எனவே, உலகில் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதார நாடான இந்தியாவில் முதலீடு செய்ய இது சரியான நேரம். உணவு பதப்படுத்துதல், நீலம் அல்லது பசுமைப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப் பெரிய அளவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன.
எண்ம உள்கட்டமைப்பு மேம்பாடு, இந்தியாவில் பரிவா்த்தனைகளுக்கான செலவைக் குறைத்துள்ளதோடு, வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தி தொழில் செய்வதை எளிதாக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிகள், உலக வா்த்தக அரங்கில் நம்பகமான, திறன் மிக்க வா்த்தக கூட்டுறவு நாடாக இந்தியாவை முன்னிலைப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா்.

