

அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாடகி மைதிலி தாக்குர், 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை(நவ.14) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அதேவேளையில், பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த நிலையில், அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான 25 வயதான பாடகி மைதிலி தாக்குர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பினோத் மிஷ்ராவைவிட 11,730 வாக்குகள் அதிகமாகப் பெற்று தனது அரசியல் வாழ்க்கையில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பிகாரில் மிகவும் பிரபலமான நாட்டுப்புறப் பாடகியான மைதிலி தாக்குர், கடந்த அக். 14 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அதன்பின்னர், அவருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அலிநகரில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான மைதிலி தாக்குருக்கு 84,915 வாக்குகளும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பினோத் மிஸ்ராவுக்கு 73,185 வாக்குகளும் கிடைத்தன.
இதன்மூலம், பாஜகவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ. ஆகும் அதிர்ஷ்டம் மைதிலி தாக்குருக்கு அடித்துள்ளது.
முன்னதாக, 2005 ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளர் 26 வயதான தௌசீப் ஆலமும், அதைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ரகோபூரிலிருந்து 26 வயதில் ஆர்.ஜே.டி.யின் தேஜஸ்வி யாதவ் இளம் வேட்பாளர்கள் என்ற பெருமையைப் பெற்றிருந்தனர். தற்போது அதனை முறியடித்துள்ளார் மைதிலி தாக்குர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.