பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!

பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.
நிதீஷ் குமார் - நரேந்திர மோடி
நிதீஷ் குமார் - நரேந்திர மோடிANI
Published on
Updated on
2 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

இதன் மூலம் பாஜக மற்றும் ஜனதா தளம் இணைந்து பிகாரில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகிறது.

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு, 122 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் இதர கட்சிகளின் கூட்டணி இணைந்து 190 தொகுதிகளில் முன்னிலை வகித்து, பிகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக மட்டும் 85க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பிகாரில் நடந்த பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. முற்பகல் 12 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம் 73 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 31 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று சுமார் 188 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 36 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 9 தொகுதிகளிலும் முன்னிலைப் பெற்று ஒட்டுமொத்தமாக 51 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

எனவே, பிகாரில், மீண்டும் பாஜக - ஜனதா தளம் கூட்டணி தலைமையிலான ஆட்சியமையப் போகிறது என்பது முன்னிலை நிலவரங்கள் மூலமாகவே அறியப்படுகிறது.

2020 - 2025 தேர்தல் முடிவுகள் ஒரு ஒப்பீடு!

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் இந்த பிகார் தேர்தல் தேஜ கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.

அதாவது, 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தேஜ கூட்டணி 37.26 சதவிகித வாக்குகளை மட்டும்தான் பெற்றிருந்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்ட மகாகத்பந்தன் கூட்டணியோ 37.23 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது.

ஆட்சியமைத்த கட்சியும் எதிர்க்கட்சியும் பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தை பார்த்த எவர் ஒருவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கும். அதாவது 0.03 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது.

அது மட்டுமல்லாமல் பிகாரில் கடந்த 2020 தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலும் 12 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருந்தனர். குறைவான வாக்குகளில் வெற்றி பெற்றாலும் வெற்றி வெற்றிதானே என்று கேட்கலாம். ஆனால் அந்த வெற்றியிலும், அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகமாக பெற்ற தொகுதிகள் எவ்வளவு தெரியுமா? வெறும் 15 தொகுதிகள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், 2025 பேரவைத் தேர்தலில் 12 மணி நிலவரப்படி, பாஜக - ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி பெற்றிருக்கும் ஒட்டுமொத்த வாக்குகள் 46.18 சதவிகிதம். ஆனால் 35.28 சதவிகித வாக்குகளைத்தான் மகாகத்பந்தன் கூட்டணி பெற்றுள்ளது.

2025 சட்டப்பேரவைத் தேர்தலில், இரு கூட்டணியும் பெற்றிருக்கும் வாக்கு விகிதம் பெரிய அளவில் மாறியிருக்கிறது. இது வாக்கு எண்ணிக்கை முடிவில் முழுமையாக வெளியாகும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

12.30 மணி நிலவரப்படி, பாஜக 21.32 சதவிகித வாக்குகளையும் ஜனதா தளம் 18.92 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 23.11 சதவிகித வாக்குகளைப் பெற்று, அதிக வாக்குகளைப் பிடித்திருக்கும் கட்சிகளின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com