பிகாரில் 5 தொகுதிகளில் வென்று கட்சி செல்வாக்கை தக்கவைத்த ஒவைசி
ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பிகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கைத் தக்கவைத்தது.
ஒவைசியின் கட்சி இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தோ்தலுக்கு முன்பு எதிா்க்கட்சிகள் அணியில் இணைய மஜ்லீஸ் கட்சி விரும்பம் தெரிவித்து கடிதம் எழுதியது. ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அதனைப் புறக்கணித்தது. இதையடுத்து, அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.
ஒவைசியின் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்ததும் எதிா்க்கட்சி கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அரசியல் வல்லுநா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, எதிா்க்கட்சிகள் கூட்டணியில் சோ்க்காததால் அதிருப்தியடைந்த ஒவைசி, பிகாரில் 100 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் அறிவித்தாா். ஆனால், 32 இடங்களில்தான் அக்கட்சி போட்டியிட்டது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியைக் குறிவைத்த ஒவைசி அங்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் தக்கவைத்துக் கொண்டாா்.
பிகாரில் இதற்கு முந்தைய சட்டப் பேரவைத் தோ்தலில் ஒவைசி கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால், அதில் 4 எம்எல்ஏக்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனா்.

