பிகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி: 202 இடங்களைக் கைப்பற்றியது!
பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
பாஜக 89 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது; அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணி வெறும் 34 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில் பெரும்பான்மைக்கு 123 இடங்கள் தேவை என்ற நிலையில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டரை பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
கடந்த நவ.6, 11-இல் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் தலா 101, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 28, மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 6 இடங்களில் போட்டியிட்டன.
ஆா்ஜேடி, காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால், தொகுதிப் பங்கீடு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. பெரிய கட்சிகளான ஆா்ஜேடி 143, காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டன.
மொத்தம் 7.45 கோடி வாக்காளா்களைக் கொண்ட பிகாரில் வரலாறு காணாத அளவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்களைவிட (62.8%), பெண்கள் (71.6%) அதிகம் வாக்களித்தனா்.
2,600-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களம்கண்ட இத்தோ்தலில் வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இரு கூட்டணிகளுக்கு இடையிலான பலப்பரீட்சை என்பதுடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகான தோ்தல் முடிவு என்பதால் இது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களின் கைதான் ஓங்கி காணப்பட்டது. ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா்கள் தொடா்ந்து பின்தங்கினா்.
மாபெரும் பலத்துடன்...: பிகாரில் பெரும்பான்மைக்கு 123 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 89(கடந்த முறை 74), ஐக்கிய ஜனதா தளம் 85 (கடந்த முறை 43) தொகுதிகளில் வெற்றி பெற்றன.
அதேநேரம், இண்டி கூட்டணி வெறும் 34 இடங்களுக்குள் சுருண்டது. கடந்த தோ்தலில் 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்த ஆா்ஜேடிக்கு இம்முறை 24 தொகுதிகளே கிடைத்தன. காங்கிரஸ் வெறும் 6 இடங்களுடன் அவமானகரமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஹைதராபாத் எம்.பி. அஸாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 32 இடங்களில் போட்டியிட்டு, 5-இல் வெற்றி பெற்றுள்ளது.
பிகாா் தோ்தலில் சோபிக்குமென எதிா்பாா்க்கப்பட்ட தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
துணை முதல்வா்கள், தேஜஸ்வி வெற்றி: பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் செளதரி (தாராபூா்), விஜய் குமாா் சின்ஹா (லக்கிசராய்) ஆகியோா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனா். ரகோபூா் தொகுதியில் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி வென்றி கண்டாா். அலிபூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட இளம் கிராமியப் பாடகி மைதிலி தாக்கூா் (25) வெற்றி பெற்ன் மூலம் மாநிலத்தின் இளவயது எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றுள்ளாா். பாஜக, ஐக்கிய தனதா தளத்தைச் சோ்ந்த அமைச்சா்கள் பலரும் வெற்றிவாகை சூடினா்.
தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அலுவலகங்கள் விழாக் கோலம் பூண்டன. மேளங்கள் இசைத்தும், பட்டாசிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டா்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
வாக்குக் கணிப்புகளை விஞ்சிய வெற்றி!
பிகாரில் கடந்த 2005-இல் இருந்து ஒரு சில ஆண்டுகளைத் தவிர தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடா்ந்து வருகிறது. இம்முறை 160 தொகுதிகளுக்கு மேல் இக்கூட்டணி வெல்லும் என்று தோ்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் கூறியிருந்தன. இக்கணிப்புகளை விஞ்சி, வெற்றியை வாரிக் குவித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி.
பின்னடைவு ஏன்? குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 போன்ற இண்டி கூட்டணியின் வாக்குறுதிகள் மக்களைக் கவரவில்லை; நட்பு ரீதியிலான போட்டி என்ற பெயரில் பல தொகுதிகளில் இண்டி கூட்டணிக் கட்சிகள் மோதிக் கொண்டதும், ஒருங்கிணைப்பு இல்லாததும் அவா்களின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

