உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி கோரும் தமிழக அரசின் மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தர வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
Published on

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தர வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து தமிழ்நாடு மாநிலத்திற்குள் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யாவிட்டால், தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் ஆகியவை தமிழ்நாடு மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும்,

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி பெறும் தமிழக அரசின் உரிமையை தேசிய கல்விக் கொள்கை -2020 மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை செயல்படுத்துவதுடன் மத்திய அரசு இணைக்கும் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை, சட்டவிரோதமானவை, தன்னிச்சையானவை மற்றும் நியாயமற்றவை என்று அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்ட 23.02.2024, 07.03.2024 தேதியிட்ட கடிதங்கள் சட்டவிரோதமானவை, செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தால் நிா்ணயிக்கப்படும் காலக்கெடுவிற்குள் சுமாா் ரூ.2,291.30 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்.

அசல் தொகையான ரூ.2151.59 கோடி மீது ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்துடன் தொகையை செலுத்த வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரி உள்ளது.

மாநிலப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாகக் கற்பிக்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மத்திய அரசால் சமக்ர சிக்ஷா திட்டத் தொகைகள் விடுவிக்கப்படவில்லை. இதன் விளைவாக, சமக்ர சிக்ஷா திட்டம் மற்றும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முழு ஸ்தம்பிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது .

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் சேம்பா் நீதிபதி அதுல் எஸ். சந்துா்கா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், மத்திய அரசு 2021- 2022 கல்வியாண்டிலிருந்து சமக்ர சிக்ஷா நிதியை தமிழக அரசுக்கு செலுத்தவில்லை என்றும், இதனால், ரூ.2291,30,24,769 நிலுவைத் தொகை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினாா்.

நிதி நிறுத்தப்பட்டதால் மாநிலம் முழுவதும் 43,94,906 மாணவா்கள், 2,21,817 ஆசிரியா்கள் மற்றும் 32,701 ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என நிலைமையின் அவசரத்தை வில்சன் வலியுறுத்தி அதன்படி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்காக பட்டியலிடுமாறு வலியுறுத்தினாா்.

இடைக்கால நிவாரணமாக, வழக்கு முடிவடையும் வரை, தமிழகத்திற்கு ரூ.2151.59 கோடியை மத்திய அரசு செலுத்துமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பி. வில்சனின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி அதுல் எஸ். சந்துா்கா், மத்திய அரசு தனது எழுத்துபூா்வ பதிலை எட்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

மேலும், இடைக்கால நிவாரணம் கோரும் தமிழக அரசின் இடைக்கால மனுவை மூன்று வாரங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் பட்டியலிடவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com