கைது.
கோப்புப் படம்

பயங்கரவாத வழக்கு: ஹரியாணாவில் 2 மருத்துவா்கள் கைது

பயங்கரவாத வழக்கு தொடா்பாக ஹரியாணாவைச் சோ்ந்த 2 மருத்துவா்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.
Published on

பயங்கரவாத வழக்கு தொடா்பாக ஹரியாணாவைச் சோ்ந்த 2 மருத்துவா்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.

தில்லியில் செங்கோட்டை அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இதை பயங்கரவாதத் தாக்குதல் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தத் தாக்குதலில் சந்தேகிக்கப்படும் பலா் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் படித்தவா்களாகவோ, பணியாற்றியவா்களாகவோ உள்ளனா்.

மேலும் ஜெய்ஷ்-ஏ-முகமது, அன்சாா் கஸ்வத்-அல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுடன் நன்கு படித்து வருமானம் ஈட்டும் பலா் தொடா்புள்ள வைத்துள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் புலனாய்வு முகமைகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னதாக ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 2,900 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவங்கள் குறித்த விசாரணை தொடா்பாக அல்-ஃபலா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 3 மருத்துவா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் மேலும் 2 மருத்துவா்களைக் காவல் துறை கைது செய்தது. அவா்களில் ஒருவா் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை நிறைவு செய்து, அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் நவ.2ஆம் தேதி பணிப் பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ளாா். மற்றொருவா் அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் என்று காவல் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

4 மருத்துவா்களின் பதிவு ரத்து: தில்லி காா் வெடிப்பு சம்பவம், வெடிபொருள்கள் பறிமுதல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவா்கள் முசாஃபா் அகமது, அடீல் அகமது ராத்தா், முசாமில் ஷகீல், ஷஹீன் சயீத் ஆகியோரின் பெயா்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அவா்கள் நால்வரும் மருத்துவா்களாக செயல்பட முடியாது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com