

சூரத்: பிகார் தேர்தலில் ‘முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸை’ மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக விமர்சித்தார்.
குஜராத் மாநிலம் சூரத்தில், பிகாரிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றுக்கு பிரதமர் மோடி இன்று(நவ. 15) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பிகார் தேர்தல் குறித்து மக்களிடையே குறிப்பிட்டுப் பேசினார்.
அவர் பேசியதாவது; “கடந்த பத்தாண்டுகளாக தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் இவ்விஷயத்தில் தங்கள் கட்சியை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஏற்கெனவே, இந்த முஸ்லீம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸை (எம்எம்சி) நிரகரித்துவிட்டனர்.
இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருடன் பணியாற்றிய காங்கிரஸிலுள்ள பல தேசியத் தலைவர்கள்கூட, ராகுலால் மகிழ்ச்சியாக இல்லை. கட்சியைக் காப்பாற்றுவது இப்போது கடினமாக மாறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் பலர் பேசத் தொடங்கிவிட்டனர். 50 - 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் கடந்த பத்தாண்டுகளில் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிகாரில் ‘எம்.ஒய்’ - மகிளா(பெண்கள்) மற்றும் யுவ (இளையோர்) ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.
பிகாரில் அனைத்து மத மற்றும் வகுப்பினர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பேராதரவை வழங்கியுள்ளனர். தலித் சமூகப் பிரிவினர் ஆதிக்கம் நிறைந்த 38 தொகுதிகளில் 34 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகளை தலித் சமூகமும் நிராகரித்துள்ளதைக் காண முடிகிறது.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராமங்கள் வக்ஃப் சொத்துகளாக தீர்மானிக்கப்பட்டுள்ளன. இப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய பிரச்னைகள் எழுந்ததைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்தை தாக்கல் செய்தது.
பிகாரில் ஜாமீனில் வெளியே வந்துள்ள அரசியல்வாதிகள்(காங்கிரஸை சேர்ந்தவர்களைக் குறிப்பிட்டு) சாதிய விஷத்தை பரப்ப தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தினர். சாதியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், சாதியவாதம் என்ற விஷத்தை பிகார் தேர்தல் நிராகரித்துவிட்டது. இந்த முடிவு நாட்டுக்கு ஒளிமயமான குறியீடாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், பிகாரில் ஜாமீனில் வெளியே வந்த சில அரசியல்வாதிகளும்(காங்கிரஸார்) அவர்களது கூட்டாளிகளும் பொதுவெளியில் வக்ஃப் சட்டத்தைக் கிழித்தெறிந்தனர். மேலும், தாங்கள் பிகாரில் வெற்றி பெற்றால் வக்ஃப் சட்டத்தை பிகாரில் அமல்படுத்த விட மாட்டோம் என்றும் பிரசாரம் செய்தனர். இத்தகைய சமூகப் பிரிவினைவாத விஷத்தை பிகார் மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டனர்.
இந்தத் தேர்தல் தோல்வி எதனால் என்பதை காங்கிரஸால் விளக்கக்கூட முடியவில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.