

புது தில்லி: தலைநகர் தில்லியின் செங்கோட்டைப் பகுதியில், காரில் வெடிபொருளைக்கொண்டு வெடிக்க வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மாதிரி பயங்கரவாதத் தடுப்புப் படையினருக்கு மிக மோசமான செய்தியாக அமைந்துள்ளது.
காரணம், காரில் வெடிபொருளை நிரப்பி, நான்கு சக்கரங்களைக் கொண்ட காரையே வெடிகுண்டாக மாற்றி நடத்தப்படும் தற்கொலைப் படைத் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிவது கடினம் என்பது மட்டுமல்லாமல், மனிதர்களால் உடலில் கட்டி இயக்கப்படும் வெடிகுண்டுகளை விடவும் இதனால் ஏற்படும் சேதாரம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதே.
பொதுவாக ஒரு வெடிகுண்டு என்று இருந்தால் அதில் இருக்கும் குண்டுகள் அல்லது இரும்புத் துகள்கள்தான் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், காரில் வெடிபொருளை வைத்து அதனை தகர்க்கும்போது கார் பாகங்கள்தான் வெடித்துச் சிதறும். அப்போது, அதனால் ஏற்படும் உயிர்பலிகள் கடுமையாக இருக்கும், வெடிபொருளின் வீரியம் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இருக்கும், அருகில் இருக்கும் வாகனங்கள் மனிதர்கள் கடுமையான சேதத்தைச் சந்திப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தாக்குதல்கள் தில்லி மற்றும் நாடு முழுக்க ஒரு சில இடங்களில்தான் நடந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலிலும், பயங்கரவாதிகள் வெடிபொருள்களை நிரப்பிய வாகனத்தை, சிஆர்பிஎப் வீரர்கள் வந்த வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதி தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதன்பிறகு, 2022ஆம் ஆண்டு கோவையில் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதலில், கார்களில் வெடிபொருள்களை நிரப்பி, அதனைக் கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்களில், நாள்தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, ஒவ்வொரு காரையும் சோதனை செய்ய முடியாது.
வழக்கமாக, சாதாரண மக்கள் பயன்படுத்தும் கார்களைத்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்துவார்கள் என்பதால் பயங்கரவாதத் தடுப்புப் படையினருக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியிருப்பதாகக் கருதப்படுகிறது.
ஒரு காரில் வெடிபொருள்களை நிரப்பி வைத்துக் கொண்டு அதனை எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதி காருக்குள் இருந்து கொண்டு வெடிக்க வைக்க முடியும் என்றால், அவர்களுக்கு அது பல வழிகளில் வசதியாக மாறிவிடும்.
இதுபோன்று கார்களில் வெடிபொருள்களை நிரப்பும்போது, வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வழக்கமான பெல்லட், இரும்புத் துகள் போன்றவை தேவைப்படுவதில்லை.
கார்களுக்குள் வெடிபொருள்கள் வெடிக்கும் போது கார் என்ஜின், கார்கள் என அனைத்தும் ஆயுதங்களாக மாறக்கூடும் என்று ஓய்வு பெற்ற காவலர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
சோதனைச் சாவடிகளில், இதுபோன்ற வாகனங்கள் வரும்போது, அதில் இருக்கும் அழுத்தம் காரணமாக கார்கள் இறங்கி இருக்கும், ஓட்டுநர் பதற்றத்துடன் இருப்பார் என்பதுபோன்றவை மட்டுமே சில அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள் காவல்துறை தரப்பிலிருந்து.
இதையும் படிக்க.. வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.