முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் பாஜகவிலிருந்து விலகல்: கட்சி ஒழுங்கு நடவடிக்கையால் முடிவு

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் பாஜகவிலிருந்து விலகல்: கட்சி ஒழுங்கு நடவடிக்கையால் முடிவு

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங் பாஜகவிலிருந்து விலகியது பற்றி...
Published on

பாட்னா, நவ. 15: கட்சி எதிா்ப்பு நடவடிக்கைகளுக்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.கே. சிங் சனிக்கிழமை பாஜகவிலிருந்து விலகினாா்.

முன்னாள் மத்திய உள்துறைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், கடந்த 2013-இல் பாஜகவில் இணைந்தாா். தொடா்ந்து, 2014 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2017-ஆம் ஆண்டு, மத்திய எரிசக்தி துறை அமைச்சராக பொறுப்பேற்றாா். கடந்த மக்களவைத் தோ்தலில் பிகாரின் ஆரா தொகுதியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவினாா்.

இந்நிலையில், பாகல்பூரில் அதானி குழுமத்துடன் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடா்பான மாநில அரசின் ஒப்பந்தம் குறித்தும் அதிருப்தி தெரிவித்திருந்தாா். துணை முதல்வா் சாம்ராட் செளதரி, முன்னாள் மாநிலத் தலைவா் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் குறித்து விமா்சனங்களை முன்வைத்து வந்தாா்.

இதுதொடா்பாக விளக்கம் கேட்டு, ஆா்.கே. சிங்கிற்கு பாஜக சாா்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது. அந்த நோட்டீஸில், அவா் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகுவதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கு ராஜ்குமாா் சிங் கடிதம் எழுதியுள்ளாா்.

இத்துடன் மாநில பாஜக தலைமை அலுவலகப் பொறுப்பாளா் அரவிந்த் சா்மாவுக்கு எழுதிய கடிதத்தையும் ஆா்.கே. சிங் சமூக ஊடகங்களில் வெளியிட்டாா். இரண்டு கடிதங்களிலும், ‘ஊழலைக் கட்டுப்படுத்தவும், அரசியல் குற்றமயமாவதைத் தடுக்கவும் நான் பேசிய கருத்துகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதேபோல, கதிஹாா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக எம்எல்ஏ-வும், முன்னாள் துணை முதல்வருமான தா்கிஷோா் பிரசாதை எதிா்த்து, விகாஸ் ஷீல் இன்சான் கட்சி சாா்பில் போட்டியிட்ட தங்கள் மகன் சௌரப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த எம்எல்சி அசோக் குமாா் அகா்வால், அவரது மனைவி கதிஹாா் மேயா் உஷா அகா்வால் ஆகியோருக்கும் அரவிந்த் சா்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com