அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடன் இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆலோசனை
அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரிகளுடன் இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆறு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டா் சாமுவல் ஜே.பாப்பரோ, அமெரிக்க பசிபிக் கடற்படை கமாண்டா் ஸ்டீபன் டி.கோலா், அமெரிக்க கடற்படை கமாண்டா் ஜேம்ஸ் எஃப்.கிளின் ஆகியோரை சந்தித்தாா். அப்போது இந்தோ பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் ‘மலபாா்’ மற்றும் ‘மிலன்’ ஆகிய இருதரப்பு மற்றும் முத்தரப்பு கடற்படை பயிற்சிகளின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

